புத்துணர்வு முகாமில் பங்கேற்க மணக்குள விநாயகர் கோயில் யானை தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைப்பு

புதுச்சேரி : தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பங்கேற்க புதுவை மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்று புறப்பட்டு சென்றது.

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இதில், கடந்த 2012ம் ஆண்டு முதல் யானைகள் முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டிற்கான யானைகள் முகாம் தேக்கம்பட்டியில் இன்று (8ம் தேதி) துவங்கி 48 நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்கும் யானைகளுக்கு உடல் பரிசோதனை, சிகிச்சை, உடல் எடை பராமரிப்பு, மூலிகை உணவு உள்ளிட்டவை வழங்கப்படும்.

இம்முகாமில் புதுவை மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியும் பங்கேற்பது வழக்கம். அதன்படி, லட்சுமி யானை நேற்று மாலை தாவரவியல் பூங்காவில் இருந்து தேக்கம்பட்டிக்கு புறப்பட்டது. யானை லட்சுமியுடன் கோயில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், கால்நடை மருத்துவர் சம்பத்குமார் மற்றும் 2 பாகன்கள் செல்கின்றனர்.

இன்று (8ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு யானை லட்சுமி, தேக்கம்பட்டி சென்றடைகிறது. முன்னதாக, நேற்று காலை மணக்குள விநாயகர் கோயிலில் லட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் அறநிலையதுறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் அறங்காவல் குழுவினர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: