மணம் வீசும் தொகுதி இது... மனம் நோக விட்டுட்டாரே...! நிலக்கோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ தேன்மொழி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியில், 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தங்கதுரை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  பின்னர் டி.டி.வி. அணிக்கு மாறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து இத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், 2006ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தேன்மொழி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேன்மொழி ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவர், இந்த முறை ஏதாவது செய்வார் என்று மக்களும் நம்பி வாக்களித்தனர்.

ஆனால், வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என அந்த தொகுதி வாக்காளர்கள் இப்போது புலம்பியும் திட்டியும் தீர்க்கின்றனர். நிலக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை, மலர் விவசாயம் பல ஆயிரம் ஏக்கரில் நடக்கிறது. ‘விலை குறைவதைத் தடுக்கும் வகையில் இங்கு அரசு குளிர்பதன கிட்டங்கி அமைத்துத் தரப்படும்’ என்றார். ‘வத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி, விருவீடு பகுதியில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்கப்படும்’ என்றார். ‘அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவேன்’ என ஏராளமான வாக்குறுதிகளை பிரசாரங்களின்போது அள்ளி இறைத்தார். ஆனால், எதுவுமே இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

கொரோனா காலத்தில் 3 மாதங்கள் வீட்டிலேயே இருந்தார். வெளியே தலைகாட்டவில்லை. தொகுதி மக்களை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் வலைத்தளங்களில் காணவில்லை என போஸ்டர்களை போடும் அளவுக்கு கடும் விமர்சனங்களைச் சந்தித்தார். தொகுதியில் யார் எம்எல்ஏ என பேசுமளவுக்குத்தான் தேன்மொழி உள்ளார் என எதிர்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பூக்கள் விளைந்து மணம் வீசும் தொகுதியை, இப்படி மனம் வெம்பி வாட வைக்கும் அளவுக்கு கொண்டு சென்று விட்டாரே என தொகுதி மக்களும் புலம்பி வருகின்றனர்.

* ‘கொரோனாவுக்கு பயந்து வீட்டிலேயே இருந்த எம்எல்ஏ’

திமுக சார்பில் இங்கு போட்டியிட்ட சௌந்தரபாண்டியன்: தேன்மொழி தன்னை நம்பி வாக்களித்த வாக்காளர்களின் நம்பிக்கையை ஏமாற்றி விட்டார். சொன்னதை எதுவும் செய்யவில்லை. அனைத்து கண்மாய்களையும் இணைத்து தண்ணீர் கொண்டு வருவோம் என்றார். இதுவரை எந்த கண்மாயையும் இணைக்கவில்லை. கொரோனா காலத்தில் 3 மாதம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். அவரது இயலாமையை மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர். எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்படுவதேயில்லை. தேன்மொழியின் கணவர் சேகர் எம்எல்ஏ போல செயல்படுகிறார். 2 தேர்தலில் வெற்றி பெற வைத்தும் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததால் மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. எனவே, இம்முறை நிலக்கோட்டை தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாகவே உள்ளது.

* ‘கொரோனா நிதியை அரசு எடுத்துக்கொண்டது’

நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி: 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இதில் ஒரு வருடம் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. கொரோனாவிற்காக எம்எல்ஏ நிதியில் ஒரு பகுதியை அரசு எடுத்துக் கொண்டு விட்டது. இருந்தபோதிலும் கொரோனா காலத்தில் பல லட்சங்கள் செலவு செய்து தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். அணைப்பட்டி அருகே வைகை ஆற்றில் ரூ.5 கோடியில் தடுப்பணை கட்டி உள்ளோம். அனைத்து கண்மாய்களிலும் குடிமராமத்து பணிகள் செய்துள்ளோம். தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் கண்மாய்கள் நிரம்பி தொகுதியே செழிப்பாக உள்ளது. குடிநீர் பிரச்னை வருவதற்கு வாய்ப்பில்லை.

* தளவாய்க்கு எதிராக பிரசாரம்

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளராக மீண்டும் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதே தொகுதியை முன்னாள் அமைச்சர் பச்சைமாலும் குறி வைத்திருந்தார். பச்சைமாலை சமாளிக்கும் விதமாக அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தளவாய்சுந்தரத்தின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அதிமுக நிர்வாகிகள் கூட கடந்த காலங்களில் தளவாய் சுந்தரத்தால் புறக்கணிக்கப்பட்டதால், அவருக்கு எதிராக செயல்பட்டனர். இப்போது தளவாய் சுந்தரம், சொந்த சமுதாயத்துக்கு எதுவும் இதுவரை செய்யவில்லை. கவிமணி சிலை மற்றும் மணிமண்டபம் விவாகரத்திலும், அலட்சியம் காட்டியதை சுட்டி காட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.  

அதிமுக முக்கிய நிர்வாகி தேரூர் பகுதியில், ஏக்கர் கணக்கில் நிலத்தை வளைத்து போடுவதற்கு துணை நிற்கும் தளவாய் சுந்தரம், கவிமணி மண்டபத்திற்கு இடத்தை சமுதாயமே வாங்கி தரட்டும் எனக்கூறியதாக பரவிவரும் தகவலையும், இந்த நிர்வாகிகள் ஊர், ஊராக சென்று அங்குள்ள ஊர் தலைவர்களிடம் கூறி வருகின்றனராம். இதேபோல் உள்நாட்டு மீனவர்கள், நாடார் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்களது சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவதாக தளவாய் சுந்தரத்திற்கு எதிராக உள்ளனர். என்றாலும், பணத்தை தண்ணீராக வாரி இறைத்து எப்படியும் வெற்றிக் கனியை பறிப்பேன் எனக் கூறி வருகிறாராம். குமரி வாக்காளர்களை ெபாறுத்தவரை வாக்களிக்க பணம் கொடுத்தாலும், அதனை பெற்றுக் கொண்டு, தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு போடுவதுதான் இதுவரை உள்ள வழக்கம்.

Related Stories: