முதல்வர் வருகை எதிரொலி: காட்பாடி ரயில்வே பாலம் இரவோடு இரவாக சீரமைப்பு

வேலூர்: காட்பாடியில் தமிழகத்தையும் ஆந்திராவையும் இணைக்கும் ரயில்வே மேம்பாலம் சுமார் 22 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. வேலூரில் இருந்து சித்தூர், திருப்பதி, லத்தேரி, கே.வி.குப்பம், குடியாத்தம், செங்குட்டை, காட்பாடி ஆகிய பகுதிகளுக்கு இந்த பாலத்தின் வழியாக தான் முழுமையாக போக்குவரத்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மேம்பாலம் கனரக வாகனங்களால் வலுவிழந்து, குண்டும் குழியுமாகவும், ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 27ம் தேதி சீரமைப்பு பணி தொடங்க இருந்த நிலையில் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் கலெக்டர், எஸ்பி தலைமையில் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர். மேம்பாலப்பணி நடைபெறும்போது ஒரு மாற்றத்திற்கு அங்கு போக்குவரத்து தடைசெய்ய இருமாநில அரசுக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

இதற்கிடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 9ம் தேதி வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இறைவன்காடு, கே.வி.குப்பம், காட்பாடி சித்தூர் பஸ்நிலையம், வேலூருக்கு வர உள்ளார். இதனால் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் மீது பல ஆண்டுகளாக இருந்த குண்டும், குழியுமான சாலையை நேற்றிரவு அதிகாரிகள் அவசர அவசரமாக தற்காலிக தார்சாலை அமைத்துள்ளனர். பல மாதங்களாக பாலத்தின் இணைப்பு வலுவிழந்த நிலையில் தற்போது மேம்பாலம் மீது புதிய தார்ச்சாலை அமைத்திருப்பது வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. விரைவில் முழுவதுமாக போக்குவரத்தை நிறுத்தி மேம்பாலம் முழுவதும் இரும்பு ராடுகள் பொருத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Related Stories: