ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்: பட்டம் வெல்வோருக்கு ரூ15.5 கோடி பரிசு

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நாளை தொடங்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக  தள்ளிவைக்கப்பட்டது. நாளை தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் ஆண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் திம், ரஷ்யாவின் மெட்விடேவ், கிரீசின் சிட்சிபாஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காண்கின்றனர். பெடரர் இந்த தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

ஆஸ்திரேலிய ஓபனில் 8 முறை பட்டம் வென்ற ஜோகோவிச் நாளை மதியம் முதல்சுற்றில் பிரான்சின் ஜெர்மி சார்டியை எதிர்கொள்கிறார். நடால் இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நிலையில் இதில் பட்டம் வென்றால் பெடரரின் (20 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் சோபியா கெனின், ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, செரீனா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஒசாகா, கனடாவின்  பியான்கா ஆன்ட்ரீஸ்கு , உக்ரைனின் ஸ்விடோலினா உள்ளிட்டோர்  மகுடம் சூடும் போட்டியில் உள்ளனர்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.447 கோடி. ஒற்றையர் பிரிவில் வாகை சூடும் வீரர், வீராங்கனை தலா ரூ.15.5 கோடி வழங்கப்படும். கொரோனாவாய் வருவாய் குறைவால், முதல்பரிசு கடந்த ஆண்டை விட ரூ.7.25 கோடி குறைக்கப்பட்டுள்ளது. ரன்னருக்கு ரூ.8.25 கோடி வழங்கப்படும்.

Related Stories: