தேச நலனுக்கு முன்னுரிமை நீதித்துறையின் சேவைக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டு பேசியதாவது: நமது நீதித்துறை எப்போதும் அரசியலமைப்பை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாகவும் செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக இருந்தாலும், தேச நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய எந்தவொரு சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் நீதித்துறை எப்போதும் தனது கடமையை செய்து வருகிறது.

பல நூற்றாண்டுகளாக மக்களை அடிப்படையாக கொண்ட இந்திய சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. சரியான நீதி வழங்குவதே நல்லாட்சி என்பதை நமது புராணங்களும் நமக்கு போதிக்கின்றன. எனவே, நீதித்துறை உலகத்தரம் வாய்ந்த நீதித்துறை அமைப்பை கட்டமைப்பதை நோக்கி பணியாற்ற வேண்டும். குஜராத் நீதிமன்றம் இந்திய நீதி அமைப்பு மற்றும் இந்தியாவின் ஜனநாயகம் இரண்டையும் பலப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பை நமது நீதித்துறை நிறைவேற்றியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* மோடியை புகழ்ந்த நீதிபதி

நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா பேசுகையில், ‘‘மிகவும் பிரபலமான, நேசிக்கப்படும், துடிப்பான, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரான பிரதமர் மோடி பங்கேற்கும் இவ்விழாவில் நானும் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன், மகிழ்ச்சி கொள்கிறேன்,’’ என புகழ்ந்தார். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை சர்வதேச அளவில் மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் என புகழ்ந்து பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: