பஞ்சாப், அரியானாவில் நெடுஞ்சாலைகள் முடங்கின நாடு முழுவதும் விவசாயிகள் மறியல்: டெல்லி எல்லையில் இன்டர்நெட் ரத்து; மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஞ்சாப், அரியானா மாநில நெடுஞ்சாலைகள் முடங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லியில் முன்னெச்சரிக்கையாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடக்கும் எல்லைகளில் இன்டர்நெட் முடக்கப்பட்டது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 73 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், விவசாயிகள் பின்வாங்காமல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும், ‘சக்கா ஜாம்’ எனும் தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி, நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மறியல் போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டில் மட்டும் மறியல் போராட்டம் நடக்காது என விவசாயிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

ஆனாலும், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டெல்லியில் குடியரசு தினத்தில் வன்முறை நிகழ்ந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் மூடப்பட்டன. ஜூம்மா மசூதி உள்ளிட்ட முக்கிய பல இடங்களும் மூடப்பட்டிருந்தன. விவசாயிகள் போராட்டம் நடத்தும் எல்லையில் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டது. டெல்லியில் ஷாகீன் பூங்கா பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலையில் போராடிய 50 பேரை போலீசார் கைது செய்தனர். உடனடியாக அவர்களை வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மற்றபடி டெல்லியில் எந்த இடத்திலும் மறியல் நடக்கவில்லை. போக்குவரத்துகள் வழக்கம் போல் இயங்கின.

 

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது. பஞ்சாப், அரியானாவில் இப்போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது. பஞ்சாப்பின் அமிர்தரசில் உள்ள டெல்லி-அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் தங்க நுழைவாயில் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தினர். பல்வேறு முக்கிய நகரங்களில் முக்கிய சாலைகளில் விவசாயிகள் கனரக வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு சென்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் வாகன போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பஞ்சாப், அரியானாவில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாலை 3 மணிக்குப் பிறகு டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.

* அக்.2 வரை கெடு

பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகெய்த் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சட்டங்களை ரத்து செய்வது குறித்து வரும் அக்டோபர் 2ம் தேதி வரை அரசுக்கு அவகாசம் தருகிறோம். அதன் பின் என்ன மாதிரியான போராட்டம் நடத்துவதென கலந்து முடிவு செய்வோம். எந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்,’’ என்றார்.

* 50,000 போலீஸ் குவிப்பு

போராட்ட களத்திற்கு புதிதாக விவசாயிகள் வருவதை தடை செய்யும் விதமாக டெல்லி எல்லைகளில் போலீசார் கான்கிரீட் சுவர் தடுப்புகள் அமைத்தும், முள்வேலி, ஆணிகள் பதித்தும் உள்ளனர். உத்தரப் பிரதேசத்தை ஒட்டிய எல்லையில் போராட்ட களத்திலிருந்து விவசாயிகள் வெளியேற ஏற்கனவே உபி அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் எல்லையான டெல்லி-காஜிபூர் நெடுஞ்சாலையில் நேற்று 50,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Stories: