சென்னை உள்பட 5 நகரங்களில் மட்டுமே போட்டிகள்: ஐபிஎல் மினி ஏலத்தில் 61 இடத்திற்கு 1097 பேர் போட்டி

சென்னை: ஐபிஎல்14வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது. வீரர்களுக்கு மினி ஏலம் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டுமே போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. போட்டிகளின் போது வீரர்களின் பயணத்தை குறைக்க குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே போட்டியை நடத்த ஆலோசித்து வருகின்றனர். மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் போட்டிகள் நடத்தப்படலாம் என தெரிகிறது. இதனிடையே ஐபிஎல் மினி ஏலத்திற்கு 814 இந்தியர், 283 வெளிநாட்டவர் என மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 56 பேர்  ஆஸ்திரேலியா 42, தென்ஆப்பிரிக்கா 38, இலங்கை 31, ஆப்கானிஸ்தான் 30, நியூசிலாந்து 29, இங்கிலாந்து 21, ஜிம்பாப்வே 2, ஸ்கார்ட்லாந்து 7, யுஏஇ 9, அயர்லாந்தைச் சேர்ந்த 2 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் இருக்கலாம். அதன்படி தற்போது 61 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 22 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் உள்ளன. ஜோரூட், ஸ்டார்க், ஏலத்தில் இருந்து விலகி உள்ளனர். டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஏல பட்டியலில் உள்ளார். அவருக்கு அடிப்படை விலையாக ரூ.20லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாந்த்திற்கு ரூ.75லட்சம் அடிப்படை விலையாக உள்ளது.

Related Stories: