புதிய தனியுரிமை கொள்கை சர்ச்சை வாட்ஸ்அப் மீதான வழக்கு தள்ளுபடி

புதுடெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம் அதன் தனியுரிமை கொள்கைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயனர்களின் அனைத்து தகவல்களையும் வாட்ஸ் அப் நிறுவனம் கண்காணிக்கும் அல்லது மற்றவர்களுக்கு பகிரும் என்பதால் பயனர்கள் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர். இதற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இதை அமல்படுத்துவதை வாட்ஸ்அப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்திந்திய வர்த்தக சங்க கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், ‘வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கைகள், இந்திய சட்டங்களை மீறுவதாக உள்ளதோடு நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

பொதுமக்களின் தனியுரிமை பேச்சு, கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு கடமையை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது,’ என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கு ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது,’ என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

Related Stories: