தந்தையாக மாறுவது எப்போதும் வாழ்வில் மிகச்சிறந்த தருணம்: விராட் கோஹ்லி பேட்டி

சென்னை: இந்தியா-இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் சென்னையில் இன்று தொடங்கியது. இதையொட்டி இந்திய  அணி கேப்டன் கோஹ்லி அளித்த பேட்டி:  இந்திய அணிக்கு மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரகானேவுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்ந்து, அணியில் உள்ள ஒட்டுமொத்த வீரர்களும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறோம். அனைவரும் ஒரே இலக்குடன்தான் பயணிக்கிறோம், அது இந்திய அணியின் வெற்றி மட்டும்தான்.

ஆஸ்திரேலியாவில் ரகானே தனது கடமையை நிறைவேற்றி, தேசியக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார். எனக்கும் ரகானேவுக்கும் இடையே களத்துக்கும் வெளியேயும் நல்ல உறவு உண்டு. இருவரும் பேட்டிங் செய்யும்போது, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பேட்டிங் செய்வோம். மைதானத்துக்கு வெளியேயும் அதிகமாகப் பேசுவோம். எப்போதும் தொடர்பிலேயே இருப்போம். அணியை வழிநடத்திச் செல்லக்கூடிய திறமை, தகுதி அவருக்கு இருக்கிறது. அணியின் திட்டம் குறித்து நானும், அவரும் பல்வேறு விஷயங்களை ஆலோசித்துள்ளோம்.

இருவரின் புரிந்துணர்வுதான் அணியின் டெஸ்ட் வெற்றிக்குக் காரணம். தந்தையாக மாறுவது எப்போதும் என் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணமாக இருக்கும். இதற்காக ஆஸி. டெஸ்ட் தொடரை தவறவிட்டதில் வருத்தம் இல்லை. இரண்டையும் ஒப்பிட முடியாது. மனைவியின் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் இருந்தபோது கூட, மருத்துவர்கள் அழைக்கும் முன்பு வரை செல்போனில் சுந்தர்-தாகூர் பேட்டிங்கை பார்த்துக்கொண்டிருந்தேன், என்றார்.

Related Stories: