30 மணி நேரமாக வனத்துறை கட்டுப்பாட்டில் 2வது நாளாக தெப்பக்காடு நோக்கி நடந்த ரிவால்டோ யானை: கரும்பு, பழங்களை சுவைத்தபடி பயணம்

ஊட்டி:  மசினகுடியில் சுற்றித்திரிந்த ரிவால்டோ யானையை தெப்பக்காடு முகாமிற்கு நடக்க  வைத்து அழைத்து செல்லும் பணியில் வனத்துறையினர் 2ம் நாளாக ஈடுபட்டனர்.   நீலகிரி மாவட்டம் மசினகுடி அருேக உள்ள மாவனல்லா பகுதிகளில் உலா வந்த எஸ்.ஐ. என்ற காட்டு  யானை மீது ரிசார்ட் உரிமையாளர்கள் தீப்பந்தத்தை  வீசினர். இதில் காயம் அடைந்த அந்த யானை உயிரிழந்தது. இந்த நிலையில் வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் மற்றொரு காட்டு யானையான  ரிவால்டோவிற்கும் ரிசார்ட் உரிமையாளர்களால் அச்சுறுத்தல்  இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரிவால்டோவை பாதுகாக்கும் நோக்கத்தில் அந்த யானையை யானையை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். யானையின் தும்பிக்கை நுனியில் ஏற்பட்ட காயம்  காரணமாக தும்பிக்கையில் உள்ள துளை மிகவும் சிறியதாக உள்ளது. இதனால் மயக்க  ஊசி செலுத்தி யானையை பிடிக்கும் பட்சத்தில், மூச்சு விடுவதில் சிரமம்  ஏற்பட்டு வேறு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மயக்க  ஊசி ெசலுத்தி பிடிக்காமல் நடத்தியே தெப்பக்காட்டுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை வனத்துறையினர் தொடங்கினர்.

வாழைத்தோட்டம்  பகுதியில் முகாமிட்டிருந்த ரிவால்டோவை வனத்துறை ஊழியர்கள் கரும்பு, தர்பூசணி,  வாழைப்பழங்கள் ஆகியவற்றை வழங்கி அழைத்து சென்றனர். யானைக்கு  முன்பு பழங்களை வழங்கியபடியே வனத்துறை ஊழியர்கள் செல்ல, யானை மெதுவாக  அவர்களை பின்தொடர்ந்து ெகாஞ்ச கொஞ்ச தூரமாக நடந்து வர துவங்கியது. வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து தெப்பக்காடு முகாம் மொத்தம் 12  கி.மீ. தூரத்தில் உள்ளது. தற்போது வரை யானை சுமார் 4 கி.மீ. தூரம் பயணித்துள்ளது. வனப்பகுதி வழியாக அழைத்து  வரப்பட்ட நிலையில் நேற்று இரவு மாவனல்லா பகுதியில் யானை நிறுத்தப்பட்டு, இரவில்  அது திரும்பி சென்று விடாதபடி வன ஊழியர்கள் கண்காணித்தனர். மீண்டும் நேற்று காலை 2ம் நாளாக யானையை அழைத்து செல்லும் பணி துவங்கியது. வழிநெடுக  வனத்துறை ஊழியர்கள் கொடுக்கும் பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை சுவைத்தபடியே ரிவால்டோ நடந்து சென்றது. நேற்று மாலை மசினகுடியை தாண்டி  யானை அழைத்து செல்லப்பட்டது. கடந்த 30 மணி  நேரத்திற்கும் மேலாக ரிவால்டோ யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: