அண்ணா நினைவு தின அமைதி ஊர்வலம்

காஞ்சிபுரம்: அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். காஞ்சிபுரம் திமுக சார்பில், அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அமைதி ஊர்வலம் நடந்தது. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்றார். எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு, இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காந்தி சாலை பெரியார் நினைவுத்தூண் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அண்ணா நினைவில்லம் சென்று அங்குள்ள அண்ணாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். திமுக ஆட்சிக்கு வந்ததும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பாஜ உள்பட மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்து கொள்வார் என்றார். நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், துணை செயலாளர்கள் யுவராஜ், டாக்டர் சோபன்குமார், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: