எலகங்கா விமானப்படை திடலில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் துவக்கி வைத்தார்

பெங்களூரு: வரலாற்று சிறப்புமிக்க பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை திடலில் நேற்று காலை தொடங்கியது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். இதில் இந்திய போர் விமானம் சாரஸ், சாரங்க் உள்பட பல விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூர், அபுதாபி மற்றும் இந்தியாவில் பெங்களூருவில் மட்டுமே பிரமாண்ட விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. மாநகரின் எலகங்காவில் உள்ள விமான பயிற்சி படைக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 75 ஆயிரம் சதுர அடியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை விமான கண்காட்சி நடக்கிறது. இவ்வாண்டு நடைபெறுவது 13வது சர்வதேச விமான கண்காட்சியாகும். இக்கண்காட்சி நேற்று தொடங்கி நாளை வரை 3 நாட்கள் நடக்கிறது.

கண்காட்சி துவக்க விழா காலை 9.10 மணிக்கு நடந்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கண்காட்சியை தொடங்கி வைத்தார். கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, எச்.ஏ.எல். தலைவர் மாதவன் மற்றும் அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ், ரசியா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானமான  சுகோய், சாரங்க், ரபேல், ஏஇடப்ளிவ் அண்ட் சி, யகோட் லான்ஸ், அட்வான்ஸ்டு இலகுரக ஹெலிகாப்டர், தேஜஸ், நேஷனல் ஏரோனாடிக்கல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள சாரஸ் பிடி1 என், எம்ஐ 17, சுகோய் 30 எம்கே.ஐ, ஆண்டனோவா 132 டி, ஹாக் ஐ, எச்டிடி 40 உள்பட 59 விமானங்கள் சாகசம் நிகழ்த்தியது.  

கண்காட்சி நேரம்

கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும் பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. பிப்ரவரி 5ம் தேதி மாலை 5 மணிக்கு கண்காட்சி நிறைவு பெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த 463 மற்றும் 14 நாடுகளை சேர்ந்த 78 பேர் என மொத்தம் 541 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா முதலிடம்

எடியூரப்பா பேசும்போது, மாநிலத்தில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் விண்வெளி ஆராய்ச்சி, விமான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதின் மூலம் பாதுகாப்பு துறைக்கு பயன்படுத்தும் பொருட்கள் தயாரிப்பில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடந்த 2008ம் ஆண்டு பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளியில் ஏரோஸ்பேஸ் பூங்கா அமைக்கப்பட்டது. மேலும் ஏரோஸ்பேஸ் தொழில்நுட்பத்திற்கு தனி கொள்கை வகுத்து செயல்படுத்துவதும் நாட்டில் கர்நாடக மாநிலம் மட்டுமே. மாநிலத்தில் விண்வெளி மற்றும் விமான உற்பத்தியில் 65 தவீதம் வளர்ச்சி உயர்ந்துள்ளது. ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்துவருகிறோம் என்றார்.

Related Stories: