கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய 295 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் சோமசேகர் தகவல்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய சுமார் 295 கோடி கடன் தள்ளுபடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது என கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார். சட்டமேலவையில்  கேள்வி நேரத்தின் போது  உறுப்பினர் ஆர்.தர்மசேனா எழுப்பிய கேள்விக்கு  கூட்டுறவு துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் பதிலளிக்கையில், மாநிலத்தில்  இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி  செய்ய வேண்டும் என்ற  கோரிக்கை வந்துள்ளது. அதன்படி சாம்ராஜநகர் மற்றும்  மைசூரு மாவட்டங்களில் இருந்து 73,308 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் 80  சதவீதம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 3,311  விவசாயிகளுக்கு இன்னும்  வழங்கவில்லை. சில விவசாயிகளின் வருமானம் அதிகம்  இருப்பது உறுதியாகியதால்,  கடன் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

 அப்போது  எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் குறுக்கிட்டு பேசும்போது,  மாநிலத்தில் எந்த பகுதிக்கு சென்றாலும் கூட்டுறவு வங்கியில் கடன்  தள்ளுபடி செய்ததற்காக ஆவணம் கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் வாங்கிய கடன்   தள்ளுபடி செய்யப்பட்டதா? இல்லையா? என்ற கேள்வியை விவசாயிகள்  எழுப்புகிறார்கள். உண்மையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா? என்றார். அவரின்  கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சோமசேகர், முதல் கட்டமாக கடன் தள்ளுபடி   திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளதற்கான  கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தவணையாக 57 ஆயிரம் விண்ணப்பங்கள்  வந்துள்ளது. இதற்கு கடன் தள்ளுபடி மானியம் வழங்க 295 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது உறுப்பினர்கள் காந்த் லட்சுமண்  கோட்னிகர், சாந்தராம் சித்தி உள்பட பலர் அதிருப்தி வெளிப்படுத்தினர்.

Related Stories: