மதுரை கட்டிட விபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம்!: குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல்..!!

மதுரை: மதுரையில் கட்டிட விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மேலமாசி வீதி அருகே வணிக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் மேலவேசி வீதி பகுதியில் வசித்து வரும் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமாக 65 ஆண்டுகாலம் பழமையான குடியிருப்பு இருக்கிறது. அந்த கட்டிடத்தை இடித்து, புதிய கட்டிடத்தை கட்டுவதற்கான பணிகளை செய்ய திட்டமிட்ட வாசுதேவன், 10க்கும் மேற்பட்டோரை வைத்து வேலை செய்து வந்திருக்கிறார். நேற்று திடீரென எதிர்பக்கம் இருந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்து தரை மட்டமானது. அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

அதில் உடனடியாக மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள சந்திரன், ராமன் மற்றும் ஜெயராமன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார் கட்டிட உரிமையாளர் வாசுதேவன், ஒப்பந்ததாரர்கள் கருப்பையா, அய்யனார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 3 பேர் உடலின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிட விபத்தில் இறந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கும் 10 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என தெரிவித்து போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவர்களுடன் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத காரணத்தினால் இப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்கிறது. தங்களுடைய கோரிக்கை  நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

Related Stories: