15 ஆண்டு பழமையான வாகனங்களை அழிக்க புதிய திட்டம் அறிவிப்பு தமிழகத்தில் 1.65 லட்சம் லாரிகளை அழிக்க வேண்டிய நிலை உருவாகும்: 20 ஆண்டாக நீட்டிக்க உரிமையாளர்கள் வலியுறுத்தல்

சேலம்: மத்திய அரசு நேற்று அறிவித்துள்ள பட்ஜெட்டில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் 15 ஆண்டுகளான பழைய வாகனங்களை அழிக்க  புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தால் தமிழகத்தில் 1லட்சத்து 65ஆயிரம் லாரிகள் பயனற்று போகும் நிலை ஏற்படும். இதனால்  பல்லாயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இந்தியா முழுவதும் பழைய  வாகனங்களை அழிக்க புதிய திட்டத்தை அறிவித்தார். அதில் பழைய வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் உலக  தரத்துக்கு ஏற்ப இன்ஜின் தர நிலைகள் உயர்த்தப்பட்டு, தற்போது பிஎஸ் 6 தர நிலையிலான வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பழைய  வாகனங்களின் பயன்பாட்டை ஒழித்து புதிய வாகனங்கள் வாங்க சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி  துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் பழைய வாகனங்களை தானாக முன்வந்து அழிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கொள்கையின்படி,  சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களாக இருந்தால் 20 ஆண்டு எனவும், வணிக பயன்பாடாக இருந்தால் 15 ஆண்டு எனவும் கொண்டு பழைய  வாகனங்களை இத்திட்டத்தின்கீழ் தானாக முன்வந்து ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசு நேற்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு 15 ஆண்டுகளுக்கு மேலாக வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தம் வாகன உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற திட்டத்தால் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாகன உரிமையாளர்கள்  பாதிக்கப்படுவார்கள் என்று லாரி  உரிமையாளர்கள் தெரிவித்தனர்.இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது: தமிழகத்தில் 4 லட்சத்து 63 ஆயிரம் லாரிகள் ஓடுகின்றன. இதில் 15 ஆண்டு பழமையான லாரிகள் ஒரு லட்சத்து 65 ஆயிரமாகும். பொதுவாக 15  ஆண்டுகளான லாரிகளை வைத்திருப்பவர்கள் அவர்களாகவே ஓனராகவும், டிரைவாகவும் இருப்பார்கள். ஒரு சிலர் வேண்டுமானால் 3 முதல் 5  லாரிகளை வைத்திருக்கலாம்.

மத்திய அரசு இன்று (நேற்று) அறிவித்துள்ள பட்ஜெட்டில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வரும் 15 ஆண்டு  பழமையான வாகனங்களை அழிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.இத்திட்டத்தால் சிறு லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். இந்த திட்டம் ஏற்கனவே கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதுதான். 15  ஆண்டு பழமையான வாகனங்களை ஒப்படைப்பதற்கான கட்டமைப்பு வசதி இதுநாள்வரை  இந்தியா முழுவதும் எங்கும் ஏற்படுத்தப்படவில்லை. 15  ஆண்டு வாகனங்களை ஒப்படைக்கும் திட்டம் 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்துதான் அமலுக்கு வருகிறது என்று அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளது.15 ஆண்டு பழமையான வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் சிறு ஓனர்கள் தான். இதுபோன்ற வாகனங்களை அழித்தால் சிறு ஓனர்கள்  கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே அவர்கள் பாதிக்காத வகையில் 15 ஆண்டு என்பதை 20 ஆண்டு என உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதன் மூலம்  பல்லாயிரக்கணக்கான லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். இத்தொழிலை சார்ந்து டிரைவர், கிளீனர், மெக்கானிக் பட்டறை என  ஆயிரக்கணக்கானோர் நம்பி இருக்கின்றனர். எனவே வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் வாகனங்கள் பயன்படுத்த 20 ஆண்டாக நீட்டிக்க மத்திய  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தன்ராஜ் கூறினார்.

Related Stories: