மின்விளக்குகளை சீரமைப்பதில் மெத்தனம்; இருளில் மூழ்கிய மதனத்தூர் கொள்ளிடம் பாலம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

தா.பழூர்: மின்விளக்குகளை சீரமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் மதனத்தூர் கொள்ளிடம் பாலம் இருளில் மூழ்கி கிடக்கிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது கொள்ளிடம் பாலம். இப்பாலம் அரியலூர் மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் பிரதான பாலமாக விளங்குகிறது. இப்பாலம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 2010ம் ஆண்டு அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இப்பாலம் கடந்த 2012 ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த பாலமானது சென்னை-கும்பகோணம் பகுதிகளின் போக்குவரத்து உயிர் நாடியாக விளங்குகிறது.

தஞ்சை மாவட்டத்தின் கோயில் நகரமான கும்பகோணத்தை சுற்றி நவகிரக ஸ்தலங்கள் உள்ளன. அது மட்டுமின்றி வலைங்கைமான், சுவாமிமலை, ஆலங்குடி குருபகவான் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர். அங்கு செல்ல சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவதற்கு இந்த பாலத்தையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரு நாளைக்கு சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. மேலும் கும்பகோணம் பகுதிகளில் அதிகமாக பித்தளை பாத்திரங்கள், விளக்கு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பல்வேறு பகுதிகளிலிருந்து கும்பகோணம் பகுதிக்கு காய்கறிகள், மீன் உள்ளிட்டவை சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு இவ்வகையான போக்குவரத்துகள் இப்பாலத்தின் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் பாலம் கட்டி திறக்கப்பட்ட போது முழுவதும் எறிந்தது‌. பின்னர் சில மாதங்களில் இந்த விளக்குகள் ஒவ்வொன்றாக பழுதுதடைந்தது. இந்த பழுதடைந்த விளக்குகளை மாற்றி அமைக்க எந்த துறை அதிகாரிகளும் முன்வரவில்லை.

மேலும் இந்த விளக்குகளை பொறுத்துவதில் எல்லை பிரச்னைகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பாலத்தில் உள்ள அனைத்து உயர் கோபுர மின் விளக்குகளும் பழுதடைந்த நிலையில் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த மின்விளக்குகள் இரவு நேரங்களில் ஒளி வீசாததால் பாலத்தில் அதிகமாக விபத்துகள் நடந்து வருகின்றன. மேலும் பாலத்தில் உள்ள காங்கிரீட் ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட துறைகளில் யார் இந்த மின் விளக்குகளை பொருத்துவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த மின் விளக்குகளை பொறுத்தும் பணி முழுமையாக நடைபெறால் அப்படியே கிடக்கிறது. தற்போது இந்த பாலமே இருளில் மூழ்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பாலத்தின் வழியே நடந்து செல்வதால் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிந்தால் அச்சமின்றி பாலத்தை கடந்து செல்ல முடியும். ஆகையால் உடனே எல்லை பாகுபாடின்றி பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் கோபுர மின் விளக்குகளை மாற்றி சரி செய்து இரவு நேரங்களில் ஒளிவீசும் படி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: