நாடு முழுவதும் சொட்டு மருந்து முகாம் தொடங்கியது: சென்னையில் சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளுக்கு இனிப்பு, பந்து, பொம்மைகளை பரிசளித்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என்று மொத்தம் 43,051 மையங்களில் முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.  சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளுக்கு இனிப்பு, பந்து, பொம்மைகளை பரிசளித்தார். மற்ற மாவட்டங்களில் அமைச்சர்களும், ஆட்சியர்களும் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தனர்.

பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள், நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இந்த பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், குறிப்பாக அனைத்து மையங்களிலும் கொரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 1,644 சொட்டு மருந்து மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

Related Stories: