கிடையில் அடைக்கப்பட்டிருந்த 156 ஆடுகள் திடீர் சாவு: விஷப் பயிரை மேய்ந்ததால் விபரீதம்..! கோவில்பட்டி அருகே பரிதாபம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கிடையில் அடைக்கப்பட்டிருந்த 156 செம்மறி ஆடுகள் திடீரென்று கொத்து, கொத்தாக செத்து விழுந்தன. விஷப் பயிரை தின்றதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட மழை குறைவான பகுதிகளில் மானாவாரி விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு வளர்ப்பை விவசாயிகள் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். ஆடு வளர்த்து பங்குனி உத்திரம், கொடை விழாக்களில் பலியிட்டு நேர்த்திக் கடன் நிறைவேற்ற இந்த பகுதிகளில் உள்ள ஆட்டு கிடைகளுக்கு வந்து வியாபாரிகளும், சில சமயங்களில் பொதுமக்களும் நேரடியாக வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். மேலும் பக்ரீத், ரம்ஜான் ஆகிய முஸ்லிம் பண்டிகைளின் போது இந்த விவசாயிகள் மேலப்பாளையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாங்களே நேரடியாக வந்து ஆடுகளை விற்றும் சம்பாதிப்பார்கள்.

அறுவடை முடிந்ததும் வயல் ஓரமாக ஆட்டுக் கிடைகளை போடும் விவசாயிகள் அங்கேயே தங்கி அவைகளை பராமரிப்பது வழக்கம். தினமும் ஆட்டுக் கிடைகளிலிருந்து மேய்ச்சலுக்கு திறந்து விடப்படும் ஆடுகளை மாலையில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கிடைகளில் அடைத்து தண்ணீர் வைப்பார்கள். பின்னர் அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்வது வழக்கம். கோவில்பட்டி அருகே வவ்வால் தொட்டியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் முருகன் (40), சுப்பையா மகன் கண்ணன் (47), சண்முகம் மகன் ஆறுமுகம் (45),  ஆறுமுகம் மகன் காளிமுத்து (35), மற்றொரு ஆறுமுகம் மகன் பரமசிவம் (32) ஆகியோர் ‘கிடை’ போட்டு தலா ஒருவருக்கு 100 ஆடுகள் வீதம் 500க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இந்த ஆடுகளை நேற்று காலை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு ஓய்வெடுத்த அவர்கள் மாலையில் அந்த ஆடுகளை கொட்டிலில் அடைத்து தண்ணீர் வைத்தனர். பின்னர் 5 விவசாயிகளும் ஒன்றாக சாப்பிட்டனர். பின்னர் அவரவர் கிடை அருகே படுத்து தூங்கி விட்டனர்.

இன்று அதிகாலை 6 மணி அளவில் மேய்ச்சலுக்காக ஆடுகளை வெளியே விட கொட்டிலின் கதவை திறந்த போது ஒவ்வொரு கொட்டிலிலும் ஏராளமான ஆடுகள் கொத்து, கொத்தாக செத்து விழுந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சில ஆடுகள் மயங்கிய நிலையில் கிடந்தன. அங்கேயே அந்த 5 விவசாயிகளும் இறந்த ஆடுகளை பார்த்து கதறி அழுதனர். தகவலறிந்து கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளிலிருந்து கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேய்ச்சல் பகுதியில் ஏதேனும் விஷ பயிர்களை தின்றதால் இவ்வாறு ஆடுகள் செத்திருக்கலாம் என்று யூகிக்கின்றனர். ஆடுகளை பிரேத பரிசோதனை செய்த பின்னர் தான் அவைகள் எதனால் இறந்தது? என்பது தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

வவ்வால் தொட்டி பகுதியில் இறந்து கிடந்த ஆடுகளை கணக்கெடுத்ததில் விவசாயி முருகன் கொட்டிலில் 21 ஆடுகளும், கண்ணன் கொட்டிலில் 15 ஆடுகளும், ஆறுமுகம் கொட்டிலில் 60 ஆடுகளும், காளிமுத்து கொட்டிலில் 30 ஆடுகளும், பரமசிவம் கொட்டிலில் 30 ஆடுகளும் மொத்தம் 156 ஆடுகள் உயிரிழந்துள்ளது, தெரியவந்துள்ளது. இந்த ஆடு வளர்ப்பு தொழிலை மட்டுமே நம்பி வாழ்வதால் இந்த திடீர் இழப்புக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று 5 விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர். கோவில்பட்டி அருகே வவ்வால் தொட்டியில் ஒரே சமயத்தில் 156 ஆடுகள் உயிரிழந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: