காஷ்மீர் பிரச்னையை பேச்சு மூலம் தீர்க்க வேண்டும் இந்தியா - பாக். இடையே போர் மூண்டால் பேரழிவு: ஐநா. கடும் எச்சரிக்கை

ஜெனீவா: ‘காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் பேரழிவு ஏற்படும்,’ என்று ஐநா தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்கும்படி, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை ஐநா வலியுறுத்தி உள்ளது. இதன் பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் நேற்று கூறியதாவது: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது இரு நாடுகளிடையேயான மோதல் பற்றி ஐநா கவலை தெரிவித்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக மீண்டும் அதே கருத்தை முன் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எல்லையில் நடைபெறும் எந்த சம்பவங்களும் தற்போது சரியான திசையை நோக்கி செல்லவில்லை. உலகின் அனைத்து பகுதிகளிலும் மனித உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். ராணுவ ரீதியில் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை விட, அமைதியான முறையில் தீர்வு காண்பது அவசியமாக உள்ளது. எல்லையில் நீடிக்கும் ராணுவ மோதல் இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்புக்குமே பேரழிவைத் தரும். அது உலக அரங்கிலும் எதிரொலிக்கும். திறமையான அதிகாரிகள் நம்மிடையே உள்ளனர். அவர்களின் உதவியுடன் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது இருநாடுகளுக்கும் இப்போது மிகவும் அவசியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: