மீன், இறால் ஏற்றி செல்லும் கூலர் வேன்களில் இருந்து கழிவுநீர் சாலைகளில் கொட்டும் அவலம் -வாகன ஓட்டிகள் அவதி

கொள்ளிடம் : மீன், இறால் ஏற்றி செல்லும் கூலர் வேன்களில் இருந்து கழிவுநீர், சாலைகளில் கொட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைத்தெரு பகுதியில் கொள்ளிடம் மற்றும் சீர்காழி கடற்கரை பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் கூலர் வேன்கள் மூலம் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். அப்போது அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஊற்றி கொண்டே செல்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலை களில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.

பழையாறு மீன்பிடி துறைமுகம், திருமுல்லைவாசல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் செல்லும்போது கொள்ளிடம் பகுதி சாலை முழுவதும் கழிவுநீர் ஊற்றி கொண்டே செல்கிறது. சில நேரங்களில் இந்த குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ள லாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் வழியே வேகமாக செல்லும்போது பொதுமக்கள் மீது மழைநீர் போல் கழிவுநீர் தெளிக்கிறது.

கேரளா மாநிலத்தில் மீன்கள், இறால்களை ஏற்றி செல்லும் கூலர் வேன்களில் சேமித்து வைத்து ஏதாவது ஒரு ஒதுக்குப்புறத்தில் கொட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் சாலை முழுவதும் கழிவுநீரை கொட்டி செல்கின்றனர். எனவே கூலர் வேன்களில் இருந்து சாலைகளில் கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கொள்ளிடம் சமூக சேவகர் பிரபு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Related Stories: