டெல்லி செங்கோட்டையை பார்வையிட ஜன.31 வரை பொதுமக்களுக்கு தடை: தொல்லியல் ஆய்வுத் துறை உத்தரவு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை நினைவு சின்னம் வரும் ஜனவரி 27 முதல் 31 வரை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் பறவை காய்ச்சல் வேகமாக பரவத்தொடங்கி செங்கோட்டை பகுதியிலும் 20க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்துகிடந்தன. அவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதித்ததில், பறவை காய்ச்சல் நோய் தாக்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஜனவரி 6 மற்றும் 18ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி,செங்கோட்டைக்கு பார்வையாளர்கள் சென்று வர ஜனவரி 19-22ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. அதன்பின்னர் குடியரசு தின முன்னேற்பாடுகள் பணிக்காக ஜனவரி 22-26 வரை மூடப்பட்டது.

இதன்படி, ஜனவரி 27ம் தேதியான நேற்று முன்தினம் முதல் செங்கோட்டை திறக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், நேற்று முன்தினம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, வரும் ஜனவரி 31ம் தேதி வரை செங்கோட்டை மூடப்படும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. ஆனால், தற்போது செங்கோட்டை மூடப்படுவதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டெல்லியில் கடந்த 26ம் தேதியன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்து அங்குள்ள டிக்கெட் கவுன்டர்கள், மெட்டல் டிடெக்கர்கள், மற்றும் போலீசாரின் வாகனங்கள் என அனைத்தையும் அடித்து உடைத்தனர். இதையடுத்து, டெல்லி செங்கோட்டைக்கு கூடுதல் துணை ராணுவப்படை களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில், தான், வரும் 31ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதித்து மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: