7 நாட்களாக தொற்று பரவல் தொடர்ந்து சரிவு நாட்டில் 146 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பே இல்லை

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா நிலவரம் தொடர்பாக உயர்மட்ட அமைச்சர்களின் 23வது ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமை வகித்தார். இதில்  பேசிய அவர், ‘‘மொத்த அரசாங்கம் மட்டுமின்றி, மொத்த சமூகமும் பிரதமர் மோடியின் சிந்தனையின்படி செயல்பட்டதால் கொரோனா பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது,’’ என்றார். அவர் தனது உரையில் பல்வேறு புள்ளி விவரங்களையும் வெளியிட்டார். அவை வருமாறு:

* தற்போது ஒருநாளில் 12 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யும் திறனை இந்தியா பெற்றுள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரம் பேருக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

* சிகிச்சை பெற்று வருகிறவர்களின் மொத்த எண்ணிக்கையும் 1.73 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.  

* இறப்பு விகிதம் 2020 ஜுன் மாதத்திலேயே 3.4 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. சிறப்பான மருத்துவ நிர்வாகம் காரணமாக மேலும் குறைந்து தற்போது 1.4 சதவிகிதமாக உள்ளது.

* கடந்த 7 நாட்களில் 146 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. அதேபோல், கடந்த 28 நாட்களில் 21 மாவட்டங்களில் எந்த நோயாளியும் கண்டறியப்படவில்லை.

* தொடர் முயற்சிகள் காரணமாக 19.5 கோடி பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

.07 சதவீத பேருக்கு மட்டுமே தடுப்பூசியால் பின்விளைவு

* ஜனவரி 12 முதல் 14 வரையிலான 3 நாட்களில் சுமார் 1.12 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக 1.15 கோடி டோஸ் தடுப்பு மருந்துகள், ஜனவரி 20ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.  

* தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாகக் கையாள 69 ஆயிரம் திட்ட மேலாளர்களும், 2.5 லட்சம் தடுப்பூசி நிபுணர்களும், 4.4 லட்சம் குழு உறுப்பினர்களும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.

* கொரோனா தொற்றை எதிர்கொள்ள சுகாதாரத்துறையில் 93,76,030 பேர் பணியாற்றியுள்ளனர். கோ வின் இணையதளம் வாயிலாக 53,94,098 முன்களப்பணியாளர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்.

* தடுப்பூசி வழங்குவதில் சர்வதேச அளவில் தற்போது 6ம் இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த சில தினங்களில் 3ம் இடத்தை நோக்கி இந்தியா முன்னேறும்.

* தடுப்பூசி வழங்கப்பட்ட வர்களில் 0.0007 சதவிகிதத்தினருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் கண்டறியப்பட்டுள்ளது.

 - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

புதிய கொரோனாவால் 165 பேர் பாதிப்பு

இங்கிலாந்தில் இருந்து உலகளவில் 70 நாடுகளில் பரவியுள்ள உருமாற்றம் அடைந்த அதிதீவிர புதிய கொரோனா வைரசால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 165 ஆக அதிகரித்தது. இவர்களுக்கு தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: