டெல்லி அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நடத்த அரசு அனுமதி

புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அறுவை சிகிச்சை மற்றும் பிற மருத்துவ சேவைகள் அனைத்தையும் டெல்லி அரசு மருத்துவமனைகளில் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவியதால் மாநில அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து முக்கியமான அரசு மருத்துவமனைகளை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றியது. இதனால் புறநோயாளிகள் பிரிவு உள்பட பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட டெல்லி அரசு அனுமதி வழங்கியது. மேலும் அறுவை சிகிச்சை,பிற மருத்துவ சேவைகளை தொடங்கவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி சுகாதாரத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘கொரோனா தொற்று குறைந்து வருவதால் இதற்கு முன் மருத்துவசேவை பணிகள் தொடர் பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து விதமான அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற மருத்துவசேவைகள், ஐபிடி, ஓபிடி உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எல்என்ஜேபி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சேவை பிரிவு இந்த மாத தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: