திருப்போரூர் நூலகம் எதிரே தேங்கி நிற்கும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்

திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து நெம்மேலி செல்லும் சாலையில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சாலையின் மற்றொரு திசையில் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதி, திருமண மண்டபம், ஓய்வுக்கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இவற்றை ஒட்டி திருப்போரூர் கிழக்கு மாடவீதி, திருவஞ்சாவடி தெரு ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்கிறது. ஒரு காலத்தில் மழை நீர் வடிகால்வாயாக இருந்த இந்த கால்வாய் தற்போது சாக்கடை கழிவுநீர் வெளியேறும் கால்வாயாக மாறி விட்டது.

இந்நிலையில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சார்பில் திருமண மண்டபம் கட்டப்படும்போது செப்டிக் டேங்க் கட்டுவதற்காக மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அவற்றில் ஒரு பகுதி மட்டும் தொட்டி கட்டப்பட்டது. மீதி உள்ள பள்ளத்தில் பல்வேறு தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் இவற்றில் கொசு உற்பத்தியாகி கிழக்கு மாடவீதி, திருவஞ்சாவடி தெரு, சன்னதி தெரு, சுப்பராயலு நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு தொற்று நோயை உருவாக்குகிறது.

திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் அவ்வப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. பின்னர் சில நாட்களில் மீண்டும் இந்த பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதனால் நூலகத்திற்கு வருபவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு கொசுக்கடியுடன் புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் நெம்மேலி சாலையில் நூலகம் எதிரே தேங்கியுள்ள இந்த கழிவுநீரை அகற்றிட நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: