ஆண்டிபட்டி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டி கிராமத்தில் கழிவுநீர் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. எனவே கழிவுநீர் வாறுகால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள போடிதாசன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணியக்காரன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்பகுதியில் உள்ள சர்ச் தெருவில் கழிவுநீர் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். கழிவுநீரால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘‘தங்களது பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகம் கழிவுநீரை கடந்த 6 மாதங்களாக அகற்றாமல் உள்ளது. இதனால் தங்களது பகுதியில் உள்ள 4 சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்க்கு தெரிவித்தும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தங்களது பகுதிக்கு கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்,’’என்றனர். 

Related Stories: