நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பதை ஏற்க முடியாது: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை அதிமுக அரசு ரூ.50 கோடி செலவில் அமைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருக்கிறார் என்று செய்தி வெளிவந்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த ஜெயலலிதாவிற்கு அதிமுக கட்சி அலுவலகத்தில் சிலை அமைப்பதிலோ, நினைவிடம் அமைப்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், நீதிமன்றத்தின் மாண்பை சிதைக்கிற வகையில் மக்கள் வரி பணத்தில் நினைவிடம் அமைப்பது நமது பாரம்பரியத்திற்கு, சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு சென்னை காமராஜர் சாலையில் நினைவிடம் திறப்பதை விட ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: