பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மதுராந்தகம், ஜன. 26: தமிழ்நாடு கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கம் சார்பில், தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் மதுராந்தகம் தேரடி தெருவில் நேற்று நடந்தது. சங்க மாநில தலைவர் வி.ஜே.குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் எம்.எல்.ராஜசேகர் வரவேற்றார். மாநில பொருளாளர் ஏ.ஜான்விஜயகுமார். சங்க ஆலோசகர் எல்.ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்புசாரா தொழிலாளர் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி இரா.கீதா, கட்டுமான அமைப்பு சாரா சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கே.வி.திருப்பதி, பொறியாளர் என்.பி.நடராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் தங்க பெரு.தமிழமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடுமையாக உயர்ந்துள்ள கட்டுமான பொருட்களின் விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்தி தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் மருத்துவ வசதி பலன்களை அதிகரிக்க வேண்டும். நிபந்தனையற்ற ஓய்வு ஊதியம் ரூ.3000, மகப்பேறு கால உதவி 26 வாரங்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் விபத்து நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். விபத்து மரணம் நிவாரண உதவியாக குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>