மீண்டும் அதிமுக அரசு அமைய உழைக்கவேண்டும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

உளுந்தூர்பேட்டை: ‘‘எனது தலைமையிலான அதிமுக அரசு தொடரும் என்றும், அதற்காக அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுகூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:- 1965-ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளமுத்து நடராஜன் உள்ளிட்ட உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதல்வராக எம்ஜிஆர் இருக்கும்போது இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் இரண்டு முறை உலக தமிழ் மாநாடு அதிமுக அரசின் சார்பில் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ரூ1 கோடியில் ஆய்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட ரூ10 கோடி தமிழக அரசின் சார்பில் பங்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் புலவர்களுக்கு நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. பதினென்கீழ் கணக்கு நூல். ஜெர்மன் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. சிறந்த நூல் வெளியீட்டு நிதிஉதவி ரூ50 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் எனது தலைமையிலான அதிமுக அரசு தொடரும் என்றும், அதற்காக அனைவரும் ஒன்றுமையுடன் உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

* பகுதிநேர ஆசிரியர்கள் மனு

உளுந்தூர்பேட்டையில் நிகழ்ச்சி முடித்து முதல்வர் செல்லும்போது, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் பகுதி நேர ஆசிரியர்களை கடந்த 2017ம் ஆண்டே நிரந்தரம் செய்யப்போவதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டும், இதுவரையில் பணி நிரந்தம் செய்யவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் வறுமையில் உள்ளதாகவும், உடனடியாக அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் வழங்கினார்கள். இதேபோல் அரசு மாதிரிப்பள்ளிகளில் பணியாற்றி வரும் அலுவலக பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி அந்த சங்கத்தின் நிர்வாகிகளும் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Related Stories: