பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துச் செல்லாமல் கேரளாவுக்கு ரகசிய பயணம் ஏன்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சேலம்: பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துச் செல்லாமல் கேரளாவுக்கு ரகசியமாக பயணம் மேற்
ெகாண்டது ஏன்? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்பு அதிகாரிகளை தவிர்த்து விட்டு ரகசியமாக 5 நாட்கள் வெளியூர் சென்றிருந்தார். அவர் எங்கு சென்றார் என கட்சியின் தொண்டர்களுக்கு கூட தெரிய வில்லை. இதனால் அதிமுகவினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். இந்நிலையில் 5 நாட்களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் மாலை தான் அவர் வீடு திரும்பினார்.

நேற்று காலை, ஏற்காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பஸ் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு பழம், ஹார்லிக்ஸ் போன்றவற்றை வழங்கினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அனைவருக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஓமலூரில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து பேசி, சுமூக உடன்பாடு ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியை கலெக்டரும் எஸ்பியும் எடுக்க வேண்டும்,’’ என்றார்.

வழக்கமாக வெளியூர் பயணம் சென்றால் அதிமுக சார்பில் தகவல் தெரிவிப்பீர்கள், கடந்த 5 நாட்கள் சென்றது ரகசிய பயணமா? அரசியல் பயணமா? என்ற கேள்விக்கு, `ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கேரளாவுக்கு சென்றிருந்தேன். அதிகநேரம் நின்றதால் பாதம் வலி, தசை இறுகிப் போய் இருக்கிறது. ஆயுர்வேத சிகிச்சை எப்படி செய்யலாம் என்பது குறித்து கேட்டு, சிகிச்சை பெற 3 நாட்கள் கேரளாவில் தங்கியிருந்தேன். இதனை பட்டிமன்றம் வைத்து சொல்லிவிட்டா செல்லமுடியும்’ என்றார்.

வெப்பம் அதிகரிக்க காரணம் என்ன? அண்ணாமலைக்கு டஃப் கொடுக்கும் இபிஎஸ்
‘‘ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி பழுது ஏற்படுவது குறித்த நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி, ‘இதற்கு திமுக ஆட்சிதான் காரணம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது சிறப்பான பாதுகாப்பை வழங்கினோம். திமுக ஆட்சியில் வெப்பம் அதிகரித்து வருகிறது,’’ என்று பதில் அளித்தார். தமிழகம் முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திமுக ஆட்சியால் தான் வெப்பம் அதிகரித்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியது நகைப்புக்குள்ளாகி இருக்கிறது. அதே போல தேர்தலை நடத்தியது தேர்தல் கமிஷன். தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் வாக்கு எண்ணும் மையம் இருப்பது கூட தெரியாமல் இதற்கும் திமுக அரசுதான் பொறுப்பு என்று குற்றம்சாட்டி உள்ளார். ஏற்கனவே குளுகுளுவென இருந்த கோவையில் 3 டிகிரி வெயில் அதிகரித்ததற்கு திராவிட கட்சிகள்தான் காரணம் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் எடப்பாடி தற்போது பேசி உள்ளார்.

The post பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துச் செல்லாமல் கேரளாவுக்கு ரகசிய பயணம் ஏன்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: