விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயிலில், விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 20ம் தேதி முதல் ஆகஸ்டு மாத இறுதி வரை பக்தர்கள் தரிசனம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆரம்ப நாட்களில் பக்தர்கள் வருகை குறைந்திருந்தது. தீபத்திருவிழாவுக்கு பிறகு, வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களின் வருகை வெகுவாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, அரசு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய குவிகின்றனர். எனவே, கொரோனா விழிப்புணர்வு கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பக்தர்கள் வரிசையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதனால், கோயில் வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. ராஜகோபுரம் வழியாக, பொது தரிசனம் மற்றும் ₹20 கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற பிரகாரங்களில் உள்ள சன்னதிகளை தரிசனம் செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தவில்லை.

தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மை செய்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டனர். வழக்கம் போல, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு இருந்தன.

Related Stories: