கிடப்பில் போடப்பட்ட கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டம்: பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: தமிழகத்தில் 3850 கி.மீ அளவில் இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளன. மக்கள்தொகை மற்றும் பரப்பளவை ஒப்பிடும்போது தமிழகத்தின் 1,30,058 பரப்பளவுக்கு  3850 கி.மீ  வழித்தடங்கள் மிகவும் குறைவு ஆகும். தமிழகம்  அகில இந்திய அளவில் வளர்ச்சியில் இரண்டாவது பெரிய மாநிலம் ஆகும். ரயில் அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ பரப்பளவில் எவ்வளவு ரயில்வே இருப்புபாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது ஆகும். தமிழ்நாடு தற்போது 32.07 ரயில் அடர்த்தி உள்ளது. இதை படிபடியாக 50 வரை அதிகரிக்க வேண்டும். உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை விட முன்னணியில் உள்ளன. தமிழகம் மத்திய அரசுக்கு செலுத்தும் வரி வருவாயில் 2ம் இடத்தில் உள்ளன. அதே போன்று ரயில் அடர்த்தியிலும் 2ம் நிலையை எட்ட வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு புதிய ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த அனுமதி பெற வேண்டும். தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில் வளர்ச்சியின்மை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தென்தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, மும்பை மற்றும் பெங்களுர் நோக்கி பயணப்படுகின்றனர்.

கன்னியாகுமரி தவிர மற்ற மதுரைக்கு தெற்கில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில்பாதைகள் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது ஆகும். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் குமரி மாவட்டம் தவிர உள்ள தென்மாவட்டங்களில் ஒரு கி.மீ தூரம் கூட புதிதாக ரயில்பாதை வழித்தடம் இதுவரை அமைக்கவில்லை. தென்தமிழக எல்லைக்குள் 1947க்கு பிறகு மொத்தம் 131 கி.மீக்கு மட்டுமே புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதுவரை எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை. இந்தநிலையில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை  ரயில் மூலம் இணைக்கப்படவேண்டும் என்று தென் தமிழக மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.  

கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் போது இந்த வழித்தடத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்துடன் நேரடியாக ரயில் வழி பாதை மூலம் இணைக்கபட்டுவிடும். இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த பகுதியில் முன்னேற்றம் அடையும். தற்போது கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் பயணிக்க வேண்டுமானால் நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக 136 கி.மீ பயணித்த சுற்றுபாதையில்தான் செல்ல முடியும். கிழக்கு கடற்கரை ரயில்பாதை அமைக்கப்பட்டால் பயணதூரம் 70 கி.மீ மட்டுமே ஆகும். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை,  ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தொடக்க நிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. ஆய்வுபணி முடிவடைந்து திட்ட மதிப்பீடை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்பித்துவிட்டது. இதில் காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய ரயில்பாதை அமைக்க ஆய்வு பணி நடைபெற்றது.

இந்த ஆய்வு பணியில் 214.81 கி.மீ தூரம் ரயில்பாதை அமைக்க 879 கோடிகள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் தேவகோட்டை, தேவிப்பட்டிணம், கீழகரை, ஏர்வாடி, சாயல்குடி, சூரங்குடி, குழத்து வழியாக தூத்துக்குடிக்கு சர்வே செய்யப்பட்டது. மேலும் கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் வரை பாதை அமைக்க நடைபெற்ற ஆய்வு பணியில் இந்த திட்டம் 247.66 கி.மீ தூரத்திற்கு ரயில்பாதை அமைக்க ரூ.1080 கோடி தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டிணம், மணிநகர், திசையன்விளை, நாவலடி, கூடங்குளம், மகாராஜபுரம், பெருமாள்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும். காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களை சேர்த்து 462.47 கி.மீ தூரத்தில் ரூ.1965 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த 2021-22க்கான முழு பட்ஜெட் வருகிற 1ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் திட்டத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>