பாக்.கில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவல் ஜம்மு எல்லையில் மற்றொரு சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: 10 நாட்களில் 2வது அதிர்ச்சி

ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக ஜம்மு எல்லையில் மேலும் அமைக்கப்பட்டுள்ள மேலும் ஒரு சுரங்கப் பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதால், சுரங்கம் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். இதனால், சுரங்கப்பாதைகளை கண்டறிந்து அழிப்பதற்கான பணிகளில் ராணுவம் தனி கவனம் செலுத்தி வருகிறது. கதுவா மாவட்டத்திலுள்ள ஹிரா நகர் செக்டார் பகுதியில், கடந்த ஜனவரி 13ம் தேதியன்று சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, பாபியன் கிராமத்தில் இருந்து பாகிஸ்தானின் சாகர்கர் பகுதியில் சென்று முடிந்தது. இதனால், இப்பகுதியில் தீவிர சோதனையில் பாதுகாப்பு படை ஈடுபட்டிருந்தது. தொடர் தேடுதல் வேட்டையில் நேற்று மீண்டும் ஒரு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘பன்சார் பகுதியில் 150 மீட்டர் நீளம், 30 அடி ஆழம், 3 அடி சுற்றளவுடன் சுரங்கப் பாதையை கண்டுபிடித்துள்ளோம். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த பகுதியிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை கூறியிருந்தது. இதனால், இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆயுதங்களுடன் இங்கு பறந்த டிரோன் விமானம் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேற்கண்ட இரண்டு சம்பவங்களுக்கும் இந்த சுரங்கப்பாதைக்கும் தொடர்பு இருக்கலாம்,’’ என்றார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 6 மாதங்களில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 4வது சுரங்கப்பாதையாக இது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: