டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொல்ல சதி: டிராக்டர் பேரணி நடத்தாமல் தடுக்க பல பாதுகாப்பு ஏற்பாடுகள்

புதுடெல்லி: டெல்லியில் நடக்கவுள்ள டிராக்டர் பேரணியை சீர்குலைப்பதற்காக, 4 விவசாய சங்கத் தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டமிட்ட நபரை விவசாயிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்றிரவு நடந்த இச்சம்பவத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் எல்லையில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 59வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நேற்று வரை நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதற்கிடையே வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அமைப்பினர் அறிவித்தனர்.

இந்த பேரணியை தடுக்க போலீசார் தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் கூட, அந்த சமரச முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அதனால், வரும் 26ம் தேதி ெடல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் தரப்பில் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணியை சீர்குலைப்பதாக நான்கு விவசாய சங்கத் தலைவர்களை சுட்டுக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சந்தேக நபர் ஒருவரை நேற்றிரவு பிடித்த விவசாயிகள், அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

அதற்கு முன்னதாக விவசாயிகளிடம் பிடிபட்ட நபர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களின் திட்டம் என்னவென்றால், டெல்லியை நோக்கி விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி நடத்துவார்கள். அவர்கள் டெல்லிக்குள் நுழைய முயன்றவுடன், ெடல்லி காவல்துறை அவர்களைத் தடுக்கும். அப்போது நாங்கள் அந்த கூட்டத்துக்குள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்துவோம். அந்த சந்தர்பத்தில் விவசாயிகளிடமிருந்து துப்பாக்கி சூடு நடந்ததாக போலீசார் உணருவார்கள். இதனால், கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். அப்போது கூட்டம் கலைந்துவிடும். 4 விவசாய தலைவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல எங்களுக்கு உத்தரவு உள்ளது.

இந்த தலைவர்களின் புகைப்படமும் எங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையை செய்து முடிக்க இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இரண்டு இடங்களில் இருந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டன. ஜனவரி 26ல் நடக்கும் பேரணியில், விவசாயிகள் கூட்டத்தை கலைக்க போலீஸ் சீருடை அணிந்து சிலர் கலந்து கொள்வார்கள். எங்களை இயக்கியவர் ஒரு போலீஸ்காரர். நாங்கள் பணத்திற்காக இந்த வேலையை செய்கிறோம். எங்களை பற்றி எங்கள் குடும்பத்தாரிடம் தெரிவிக்க கூடாது. பேரணியை சீர்குலைக்கும் நபர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக ஜனவரி 26ல் இடையூறு ஏற்படுத்தப்படும்.

அவ்வாறு இடையூறு செய்ய வருபவர்கள் பூட்ஸ், டர்பன் மற்றும் ரிப்பட் ஜீன்ஸ் அணிந்திருப்பார்கள். சமீபத்தில் அரியானா மாநிலம் கர்னாலில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாரின் பேரணியின் போது நாங்கள் மேடைகளை சூறையாடினோம். எங்களுக்கு பணம் தேவை என்பதால், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அந்த நபர் கூறினார். பிடிபட்ட நபரின் பேட்டி, டெல்லியில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகளால் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அரியானா மாநிலம் சோனாபட்டில் உள்ள ராய் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பிரதீப் என்று தெரிவித்தார்.

ஆனால், ராய் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக விவேக் மாலிக் என்பவர் கடந்த ஏழு  மாதங்களாக பதவி வகித்து வருகிறார். அந்த காவல் நிலையத்தில் பிரதீப் என்ற அதிகாரியே இல்லை என்பதும் தெரியவந்தது. விவசாயிகளின் பிடியில் சிக்கிய நபர் தன்னை போலீசாக காட்டிக் கொண்டு, விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் செய்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் குல்வந்த் சிங் சந்து கூறுகையில், ‘டெல்லியின் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் டிராக்டர் போராட்டத்தை சீர்குலைக்க சதி நடக்கிறது.

முகமூடி அணிந்த நபர் விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தார். அவர் போலீஸ்காரர் என்று கூறியதால், பேரணியை சீர்குலைக்க போலீஸ் ஏஜென்சிகளால் உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றே நினைக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை’ என்றார்.

Related Stories: