இட ஒதுக்கீடை மத்திய அரசு எதிர்ப்பது சமூக நீதிக்கு எதிரானது.: மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் தனி இட ஒதுக்கீடு வழங்குவதை மத்திய அரசு எதிர்ப்பது சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவ கல்வியில் அரசு பள்ளிகள் மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கல்வி தரத்தை பாதிக்கும் என்றும் மத்திய அரசு கூறும் வாதம் தவறானது என கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசு இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும் , ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த ஏழைகளுக்கும் எதிரான கொள்கையை உடையது என்பது இந்த வாதத்தின் மூலம் உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தரம் பற்றி பேசும் மத்திய அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணக்கொள்ளையை லாபத்தை உறுதிப்படுத்துவதற்காக கட்ட ஆப் மதிப்பெண்ணை கருணையுடன் குறைப்பதுதான் தகுதியை தரத்தை பாதுகாக்கும் லட்சணமா என்று டாக்டர் ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படாது என்று உறுதி அளித்த மத்திய அரசு தற்போது மாநில அரசுகளின் உரிமைகளிலும், இட ஒதுக்கீட்டிலும் தலையீடு செய்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் நிர்பந்தங்களுக்கு தமிழக அரசு அடி பணியக்கூடாது என்று மருத்துவ கல்வியில் மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுபோன்று புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை மருத்துவ படிப்பில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும் என்றும் டாக்டர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: