முதுகு, காது பகுதியில் தீக்காயத்துடன் இறந்த காட்டு யானை மீது தீப்பந்தம் வீசிய ரிசார்ட் உரிமையாளர்கள் 2 பேர் கைது: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவால் அதிர்ச்சி

ஊட்டி: மசினகுடி அருகே தீக்காயத்தால் காட்டு யானை உயிரிழந்த விவகாரத்தில் யானை மீது தீப்பந்தம் வீசிய ரிசார்ட் உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட பொக்காபுரம் பகுதியில் உடலின் முதுகு பகுதியில் ஆழமான காயத்துடன் சுற்றி திரிந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானைக்கு கடந்த மாதம் கும்கி யானைகள்  உதவியுடன் வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அந்த யானை கடந்த வாரம் இடது காது பகுதி கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் சுற்றி திரிந்தது. காது பகுதி கிழிந்து தீக்காயம் இருந்ததால் யாராவது வெடி பொருட்கள் வீசி கொல்ல  முயற்சி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

காயத்துடன் திரிந்த யானைக்கு தெப்பக்காடு முகாமில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 4 கும்கிகள் உதவியுடன் 3 கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் அடங்கிய குழுவினர் கடந்த 19ம் தேதி யானை மயக்க  மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் லாாியில் ஏற்றி தெப்பக்காடு முகாமிற்கு புறப்பட்டனர். ஏற்கனவே முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் மற்றும் காதில் ஏற்பட்ட கடுமையான தீக்காயத்தால் அவதிப்பட்ட யானை செல்லும் வழியில்  லாரியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. சிங்காரா வனச்சரகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு யானைக்கு தீக்காயம் ஏற்படுத்தியவர்கள் தேடப்பட்டு வந்தனர்.

இதனிடையே நேற்று சமூக வலைதளத்தில் பரபரப்பான வீடியோ வெளியானது. அதில் முதுமலை அருகே மாவனல்லா பகுதியில் குடியிருப்பை ஒட்டி இரவில் உலா வந்த யானை மீது ஒருவர் தீப்பந்தத்தை வீசி எறிவதும், அந்த தீப்பந்தம்  யானையின் காது பகுதியில் சிக்கி தீ கொழுந்து விட்டு எரிவதும், வலி தாங்க முடியாமல் யானை பிளீறியபடியே வனத்திற்குள் ஓடுவதும் இடம்பெற்றிருந்தது. தீ வைத்தவர்கள் ‘அப்படியே எரிந்து கொண்டே காட்டிற்குள் சென்று சாவு’ என்று  கூறும் ஆடியோவும் அதில் பதிவாகியிருந்தது.

வீடியோவை பார்த்த பலரும், கேரளாவில் பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவத்தைவிட கொடூரமான சம்பவம் இது என குறிப்பிட்டனர். ேமலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் யானை மீது தீப்பந்தம் வீசப்பட்ட இடத்தை வீடியோவில் கண்டறிந்த வனத்தறையினர் மாவனல்லா பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில்  இருந்த தனியார் ரிசார்ட்டின் வளாகத்திலேயே இந்த சோக சம்பவம் அறங்கேறியது அம்பலமானது. இதனைத்தொடர்ந்து, தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் பிரசாத் (36), ரேமண்ட் டீன் (28) ஆகிய 2 பேர் வனத் துறையினரால் கைது  செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவானார். அவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

‘கொடூரர்களை தப்ப விடக்கூடாது’

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சாதிக் அலி கூறுகையில், ‘‘ யானை வழித்தடத்ைத ஆக்கிரமித்து ரிசார்ட் கட்டியுள்ளனர்.  யானை மீது தீ வைத்த கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கையை வனத்துறை  பாரபட்சமின்றி எடுக்க வேண்டும். அவர்கள் தப்பிவிடாதபடி கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

நீலகிரியில் மிகப்பெரிய யானை

நீலகிரி வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆசிய யானைகளில் குறிப்பிட்ட சில யானைகள் மட்டும் வழக்கமான உயரத்தைவிட அதிக உயரமாக வளர்வது உண்டு. இந்த யானையும் நீலகிரி காடுகளில் வாழக்கூடிய  யானைகளிலேயே பெரிய யானையாக இருந்துள்ளது.

கண்ணீர்விட்டு கதறிய  வேட்டை தடுப்பு காவலர்

முதுகில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானைக்கு பலாப்பழம், தர்பூசணி உள்ளிட்டவைகளில் மருந்துகள் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல் இரு மாதங்களாக பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த பெள்ளன் என்ற வேட்டை தடுப்பு  காவலர் கண்காணித்து வந்துள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம், காதில் ஏற்பட்ட தீ காயம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்காக பிடித்து செல்லப்பட்டபோது லாரியிலேயே உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெள்ளன், லாரியில் நின்றபடி  உயிரிழந்து கிடந்த யானையின் தும்பிக்கையை பிடித்து, எந்திரிடா எஸ்ஐ என கூறி கதறி அழுதார். பெள்ளன் கதறி அழுதது அங்கிருந்த வனத்துறையிரையும் கண்கலங்க வைத்தது. இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Related Stories: