அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பமா?: மேற்கு வங்கத்தில் 2 மாதத்தில் 3 அமைச்சர்கள் ராஜினாமா... மம்தா பானர்ஜி கலக்கம்.!!!!

கொல்கத்தா: சுவேந்து அதிகாரியை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 3-வது அமைச்சர் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. ஆட்சியை தக்கவைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, இதில் அமைச்சராகவும், மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜ.வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, இக்கட்சியை சேர்ந்த பல எம்எல்ஏ.க்களும் பாஜ.வில் இணைந்தனர்.

இதன் அடுத்தக்கட்டமாக, இம்மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா கடந்த 5-ம் தேதி தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்து, மம்தாவுக்கு அதிர்ச்சி அளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சாந்திபூர் சட்டமன்ற தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநருக்கு ராஜீப் பானர்ஜி எழுதிய ராஜினாமா கடிதத்தில்,  மேற்கு வங்காள மக்களுக்கு சேவை செய்வது ஒரு பெரிய மரியாதை மற்றும் பாக்கியம். இந்த வாய்ப்பைப் பெற்றமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில், திரிணாமுல் காங்கிரசை உடைக்கும் பாஜ.வின் வேட்டை தீவிரமாகி இருக்கிறது. இதனால், மம்தாவின் திரிணாமுல் காங்கிரசில் சலசலப்பு நிலவுகிறது.

Related Stories:

>