4 கிமீ தூரம் நடந்து செல்லும் பக்தர்கள் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் செல்லும் மலைப்பாதை சீரமைக்கப்படுமா: கலெக்டர் ஆய்வு செய்தும் பயனில்லை

களக்காடு: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலைநம்பி  கோயிலுக்கு  செல்லும் மலைப்பாதை விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற  எதிர்பார்ப்பில்  பக்தர்கள் உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில்  நெல்லை மாவட்டம், களக்காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை  எழிலுடன் 2  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமலைநம்பி கோயில் அமைந்துள்ளது. ஏழைகளின் ‘திருப்பதி’  என்றழைக்கப்படும்  இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள திருமலைநம்பியை  ஆழ்வார்கள் மங்களாசாசனம்  செய்துள்ளது சிறப்புமிக்கதாகும். 108 வைணவ திவ்ய  தேசங்களில் முதன்மையான ஒன்றாகத் திகழும் இக்கோயிலுக்கு சனிக்கிழமை தோறும்   பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.

 தமிழ் மாத கடைசி மற்றும் முதல்   சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமைகளில்  ஆயிரக்கணக்கானோர் தரிசனத்திற்காக குவிவது வழக்கம். பிரசித்தி பெற்ற  இக்கோயிலானது திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அடர்ந்த   வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. இதில் திருக்குறுங்குடி ஊரில் இருந்து   மலையடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி வரை 4 கி.மீ. அளவுக்கு தார்   சாலை வசதி உள்ளது. ஆனால், அதன் பிறகு வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து  கோயில்  வரையுள்ள 4 கி.மீ. தொலைவிலான மலைப்பாதை சாலை வசதியின்றி கரடு,  முரடாகவும், மேடு பள்ளமாகவும் காணப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வரும்   பக்தர்கள் 4 கி.மீ. தொலைவுக்கு வனப்பகுதிக்குள் நடந்து செல்கின்றனர்.

சாலை வசதி முறையாக இல்லாததால் பெண்கள்,  குழந்தைகள், முதியவர்கள் மிகவும்  சிரமப்படுகின்றனர். கோயிலுக்கு கொண்டு வரும் பொருட்களையும், அன்னதான   பொருட்களையும் தலையில்  சுமந்து கொண்டு தான் பக்தர்கள் செல்ல  வேண்டியுள்ளது. பழுதடைந்துள்ள  சாலையில் 1 மணி நேரம் நடந்த பின்னரே கோயிலை  சென்றடைய முடியும். இக்  கோயிலுக்கு வட மாநிலங்களில் இருந்தும்  யாத்ரீகர்கள் வந்து செல்வது  குறிப்பிடத்தக்கது. எனவே வனப்பகுதிக்குள்  உள்ள 4 கி.மீ. தூரமும் சாலை  அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட  நாட்களாக கோரிக்கை விடுத்து  வருகின்றனர்.

ஆனால் இதுவரை சாலை  அமைக்கப்படாதது பெரும் குறையாகவே உள்ளது.  எனவே இனிமேலாவது திருமலை நம்பி  கோயில் வரை தார் சாலை அமைக்க அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும்,  கோயில் பகுதியில் குடிநீர் வசதி, கழிப்பறை  உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  ஏற்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள்  வலியுறுத்தி உள்ளனர்.

சித்தர்கள் வாழும் மலை

இதுபற்றி  வடகரையைச்  சேர்ந்த பக்தர் சேர்மன் துரை என்பவர் கூறுகையில்,  ‘திருக்குறுங்குடி வனப்பகுதி  சித்தர்கள் வாழும் சிறப்பு பெற்றது.  தற்போதும் அங்கு சித்தர்கள்  வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இதையொட்டியே  அழகியநம்பிராயர் கோயில்  பங்குனி பிரம்மோற்சவ விழாவில் நம்பி சுவாமிகள்  சித்தர்களுக்கு காட்சி  அளிக்கும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய  புனிதம் வாய்ந்த  கோயிலுக்கு செல்ல அரசு பக்தர்களுக்கு சாலை வசதி செய்து  கொடுப்பது  அவசியமாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை கலெக்டராக  பணியாற்றிய  ஷில்பா பிரபாகர் சதீஷ் மலைப் பாதையை ஆய்வு நடத்தினார். எனினும் சாலை  அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை’’ என்றார்.

Related Stories: