எம்பிக்கள் குழு ஆய்வின்போது குளறுபடி திருப்போரூர் ஒன்றிய துணை பிடிஓ உள்பட 3 பேர் சஸ்பெண்ட்: கலெக்டர் நடவடிக்கை

சென்னை: திருப்போரூர் ஒன்றியத்தில், நாடாளுமன்ற எம்பிக்கள் குழு ஆய்வு செய்தனர். அப்போது ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால், துணை பிடிஓ உள்பட 3 பேரை, கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மத்திய அரசின் சார்பில் நிதி வழங்கப்பட்டு மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பிரதாப் ராவ் ஜாதவ் தலைமையில் 18 எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் கடந்த 17,18 தேதிகளில் திருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலையூர் ஊராட்சியில் தனி நபர் கழிப்பறை திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டின் கழிப்பறையை காட்ட முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர். இதையடுத்து அருகே இருந்த ஒரு வீட்டின் கழிப்பறைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு, புதிய கழிப்பறை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த குழுவினர் பழைய கழிப்பறையை காட்டி எங்களை ஏமாற்றுகிறீர்களா, பிரதமர் தனிநபர் கழிப்பறை திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறை எங்கே என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை காட்டுமாறு கேட்டனர்.

அதன்படி, சிறுங்குன்றம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை அதிகாரிகள் காட்டினர். அரசு ஒதுக்கிய 1.8 லட்சத்தில் இவ்வளவு பெரிய வீட்டை கட்ட முடியுமா என கேட்ட எம்பிக்கள் குழுவினர், தங்களை ஏமாற்றுவதாகவும், அலைக்கழிப்பதாகவும், தனிநபர்கள் கட்டிய புதிய வீடுகளை காட்டி அரசு கட்டிய வீடாக கணக்கு காட்டுவதாக குற்றம் சாட்டினர். மேலும், மேலையூர் ஊராட்சியில் எத்தனை சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன் குறித்தும் தவறான தகவலை தந்தனர். இதனால் அதிருப்தியடைந்த எம்பிக்கள் குழு, இதுகுறித்து செங்கல்பட்டு கலெக்டருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில் அரசின் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனக்குறைவுடன் செயல்பட்டதாக கூறி திருப்போரூர் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மணிவண்ணன், சிறுங்குன்றம் ஊராட்சி செயலர் (பொறுப்பு) ஏழுமலை ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து கலெக்டர் நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: