24 மணி நேரமும் தாராளமாக கிடைக்கிறது சந்து கடைகளில் களை கட்டும் மது விற்பனை-பெயரளவிற்கு தினமும் பாட்டில் வழக்கு

சேலம் : டாஸ்மாக் மதுபான கடைகளை அரசு நடத்தும் நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், மலைப்பகுதிகளில் காய்ச்சி, ஊருக்குள் கடத்தி வந்து விற்பனை செய்யும் கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்கின்றனர். இந்த வகையிலான கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மதுபானங்கள், கடைகள் பூட்டப்பட்டபின் ஆங்காங்கே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலை மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளது.

 மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இந்த நேர குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபின், ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள், பல இடங்களில் சந்து கடைகளை திறந்து, எவ்வித அச்சமும் இன்றி 24 மணி நேரமும் டாஸ்மாக் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதற்கு அந்தந்த பகுதி போலீசார் துணை நிற்கின்றனர் என்பது தான் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

சேலம் மாநகரில் சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, சன்னியாசிகுண்டு, கிச்சிப்பாளையம், செவ்வாய்பேட்ைட, டவுன், அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி, வீராணம் என அனைத்து இடங்களிலும் ரகசியமாக சந்து கடைகளை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் ஆளும் தரப்பு நிர்வாகிகளின் உறுதுணையோடு, போலீசாருக்கு ‘வைட்டமின் ப’ வை கொடுத்துவிட்டு சந்து கடைகளை நடத்துகின்றனர்.  ஆனால், இந்த விவகாரத்தை பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காக தினமும் 4 மதுபாட்டில், 5 மதுபாட்டில் கையில் வைத்திருந்ததாக 10 முதல் 15 வழக்குகளை பதிவு செய்கின்றனர். மாநகர மதுவிலக்கு போலீசாரும் இத்தகயை வழக்குகளை தான் பதிவு செய்கின்றனர்.

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை பேளூர், காரிப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், தலைவாசல், சங்ககிரி, மேட்டூர், இடைப்பாடி, ஓமலூர், தாரமங்கலம் பகுதிகளில் சந்துகடைகளில் மதுவிற்பனை கனஜோராக நடந்து வருகிறது. அந்த பகுதியில் மாவட்ட போலீசார், கல்லா கட்டி வருகின்றனர். இந்த சந்துகடைகளால், 24 மணி நேரமும் மது பாட்டில்கள் கிடைக்கும் நிலை தான், மாவட்டம் முழுவதும் உள்ளது. இதற்கு அரசே மதுக்கடைகளை மூடாமல் அதிகளவு திறந்து வைத்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

மாவட்ட போலீசாரும், 4 பாட்டில், 5 பாட்டில், 10 பாட்டில் மதுபானங்களுடன் சிக்கினார்கள் என தினமும் 20க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்கின்றனர். இதில், சிக்கும் நபர்களை அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவிக்கின்றனர். பொங்கல் பண்டிகையொட்டி ஏற்காடு, தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கள்ளசாராய விற்பனை களைகட்டுகிறது.

மாநகர போலீஸ் கமிஷனரும், மாவட்ட எஸ்பியும் நேரடியாக களம் இறங்கி, அனைத்து பகுதியிலும் தீவிர சோதனை நடத்தினால் மட்டும் தான், சந்து கடைகளியும், கள்ள சாராய விற்பனையில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய இயலும். அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் உடந்தை?

அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மொத்தமாக சரக்கு விற்பனை மேற்கொள்ளக்கூடாது. ஆனால், சந்து கடை நடத்தும் நபர்கள், பல டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பீர், விஸ்கி, பிராந்தி என அனைத்து வித மதுபானங்களையும் வாங்கி பதுக்கி வருகின்றனர். பின்னர் அதனை அதிகவிலைக்கு விற்கின்றனர்.

இதனை நள்ளிரவு நேரத்திலும், அதிகாலையிலும் வாங்கி குடிக்கும் குடிமகன்கள், சாலையில் அலம்பல் செய்கின்றனர். பெண்களை கேலி, கிண்டல் செய்து, துன்புறுத்துதலில் ஈடுபடுகின்றனர். இதனால், சந்து கடை விற்பனைக்கு உடந்தையாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: