காதில் காயத்துடன் நின்ற காட்டு யானை; கூடலூர் அருகே போக்குவரத்து பாதிப்பு: வெடிவீசி கொல்ல முயற்சி- வனத்துறை விசாரணை

கூடலூர்: கூடலூர் அருகே காதில் காயத்துடன் காட்டு யானை சாலையில் நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெடிவீசி கொல்ல முயற்சி செய்திருக்கலாம் என கூறப்படுவதால் வனத்துறையினர் விசாரித்து வருகி

றார்கள். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. நேற்று மசினகுடி அருகே சிங்கார சாலையில் அந்த யானை 3 மணி நேரமாக நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள துணை மின்நிலைய ஊழியர்கள், தனியார் தங்கும் விடுதி பணியாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள், அங்கு வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் யானை அங்குள்ள சாலைக்கு வந்தது. வனத்துறையினர் சென்று கண்காணித்தபோது அதன் காது பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது.

உடனடியாக முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான குழுவினர் பப்பாளி பழத்தில் மருந்து, மாத்திரைகள் வைத்து யானைக்கு வழங்கினர். தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். யானையின் காது கிழிந்து தொங்குவதால் அதன் மீது யாரோ வெடிபொருளை வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது. வனத்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories: