12 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணை நீர்மட்டம் 71 அடியை நெருங்குகிறது: உபரிநீர் வெளியேற்றம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 71 அடியை நெருங்குகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 2139 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, தொடர் மழையால் கடந்த ஆண்டு 2 முறை 60 அடியை எட்டியது. இந்த ஆண்டு தொடங்கியது முதல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 66 அடியை எட்டியதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 68.50 அடியாக உயர்ந்தவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் 69 அடியாக உயர்ந்தவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

பொதுவாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 69 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் அணை பாதுகாப்பு கருதி உபரி நீராக வெளியேற்றப்படும். ஆனால் இந்த ஆண்டு அனைத்து பகுதிகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையில் தண்ணீரை தேக்கி தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ள பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனால் வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடி வரை தண்ணீர் தேக்கப்பட உள்ளது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 2352 கனஅடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவான 71 அடி வரை தண்ணீர் தேக்கப்படுவதால் அணை கடல் போல காட்சியளிக்கிறது.

அணையின் நீர்மட்டம் 71 அடியை நெருங்குவதால் அணை பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 2139 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆற்றுப்பகுதியில் 1200 கனஅடி தண்ணீரும், கால்வாய் பகுதியில் 750 கனஅடி தண்ணீரும் செல்கிறது. வைகை அணையில் இதுவரை 5 முறை மட்டுமே 71 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2008ம் ஆண்டு வைகை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அதன்பின் 12 ஆண்டுகளுக்கு 71 அடி வரை தண்ணீர் தேக்கப்பட உள்ளது

Related Stories: