டெல்டாவில் 13.57 லட்சம் ஏக்கர் பயிர் நாசம்: விவசாயிகள் வேதனை

திருச்சி: தஞ்சை, திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், கரூர் (குளித்தலை) ஆகிய 7 மாவட்டங்கள் காவிரி டெல்டா பகுதியாகும். இந்தாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி பயிர்கள் சுமார் 11 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை தவறி பெய்ததாலும், நிவர் மற்றும் புரெவி புயல்கள் மற்றும் தொடர் மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர்கள், மக்காசோளம், பருத்தி என சுமார் 13.57லட்சம் ஏக்கர் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சுமார் 3.50 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கீழ்வேளூர், கொள்ளிடம், சீர்காழி, தலைஞாயிறு, வேதாரண்யம், காரியாபட்டினம் செட்டிபுலம் வண்டல், குண்டுரான்வெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2.60 லட்சம் சம்பா தாளடி பயிர்கள் நாசமானது. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 367 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்ற நிலையில் நிவர், புரெவி மற்றும் தொடர் மழையால் புயலால் 3.77லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த பரப்பளவான 2 லட்சம் ஏக்கரில் சுமார் 85,000 ஏக்கரில் அறுவடை செய்ய முடியாமல் கதிர்கள் சாய்ந்தும் அழுகியும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, 25,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மக்காசோளம், உளுந்து, பயறு, எள் போன்ற பயிர்களும் மழையின் காரணமாக முழுமையாகவே அழுகிவிட்டன. பெரம்பலூர் மக்காச்சோளம் 83ஏக்கரும், பருத்தி 11 ஆயிரம் ஏக்கர், சம்பா 4400 ஏக்கர், சின்ன வெங்காயம் 4400 என ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கர் நெல், தா.பழூர் ஒன்றியத்தில் 10ஆயிரம் ஏக்கர், செந்துறை அருகே வஞ்சியபுரத்தில் 25 ஏக்கர் நெற்பயிர், இருங்களாகுறிச்சி, செந்துறை, குழுமூர் பகுதியில் சுமார் 500 ஏக்கர், ஜெயங்கொண்டம் பகுதியில் 1000 ஏக்கர் என மாவட்டத்தில் 51,525 ஏக்கர் சம்பா பயிர் சாய்ந்து முளைத்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 6 ஆயிரம் ஏக்கர், சாய்ந்து சேதமடைந்தது. திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் திருவெறும்பூர், முசிறி, தா.பேட்டை பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா, 20 ஆயிரம் ஏக்கர் பருத்தி, மக்காச்சோளம், புள்ளாம்பாடி பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் பருத்தி, 30000 ஏக்கர் மக்காச்சோளம், துறையூர் பகுதியில் 1000 ஆயிரம் ஏக்கர் சின்ன வெங்காயம், மண்ணச்சநல்லூர் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், 2,500 ஏக்கர் வெங்காயம், 4 ஆயிரம் ஏக்கர் சோளம், கம்பு, துவரை பயிர்களும், 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் கடலை பயிர்கள், என மாவட்டம் முழுவதும் 91,080 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ₹20 ஆயிரம் அறிவித்தார். இது ஏக்கர் ஒன்றுக்கு ₹8 ஆயிரம் மட்டுமே ஆகும். ஆனால் விவசாயி அமைப்புகள், சாகுபடிக்காக செலவிடப்பட்ட செலவினங்களுக்கான தொகை இல்லாததால், ஒரு ஏக்கருக்கு ₹32.500 நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: