காரைக்காலில் தொடர் மழையால் வயலிலேயே முளைத்து வீணான நெற்கதிர்கள்: ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க கோரிக்கை

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்றி, விவசாயிகள் நெற்பயிர்களை வளர்த்தெடுத்தனர். வயல்களில் நன்றாக விளைந்த நெற்கதிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடை செய்யப்படும் நிலையில் வயலில் சாய்ந்த நெல் கதிர்கள் தண்ணீரில் மூழ்கி நெல் மணிகள் முளைத்து ஒரு அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளது. இயந்திரம் கொண்டு அறுவடையும் செய்ய முடியாத நிலையில் வைக்கோலுக்கு கூட தேறாது என்கின்றனர் விவசாயிகள். நிரவி, திருப்பட்டினம் பகுதிகளில் வயல்களில் முளைத்திருக்கும் நெல்மணிகளை கண்டு காரைக்கால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதோடு, விவசாயிகளின் நகைக்கடன் உள்ளிட்ட அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் காரைக்காலில் உள்ள விவசாயிகள் சங்கங்கங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அகில இந்திய விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமீம் அன்சாரி கூறும் போது, காரைக்கால் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் அனைத்தும் கதிரிலேயே முளைத்து நாசமாகி விட்டதாக கூறினார்.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வின்சென்ட் கூறும்போது, பயிர்கள் அனைத்தும் வீணாகி விட்டதால் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், காரைக்காலில் உள்ள விவசாயத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் அகில இந்திய விவசாய சங்கம் முடிவெடுத்துள்ளது.இந்நிலையில் நாளை (19ம் தேதி) காரைக்காலை அடுத்துள்ள திருப்பட்டினத்தில் சாலை மறியல் போராட்டத்தை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Related Stories:

>