மழையால் 1 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிப்பு நிவாரணம் பெறுவதற்கான வழிமுறையை அறிவிக்க வேண்டும்: புதுகை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதற்கான நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரப்பூர்வமாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கடந்த 2 வாரங்களில் அதிகபட்சமாக 140 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.இதற்கு முன் கடந்த 2011-ல் 14 மில்லி மீட்டரும், 2012-ல் 2, 2013-ல் 25, 2014-ல் 5, 2015-ல் 2, 2017-ல் 59, 2018, 2020-ல் தலா 4 மற்றும் 2016 மற்றும் 2019-ல் மழை பெய்யவில்லை.இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக அறுவடை தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நடைபெறும். இதற்கு ஏற்ப அரசு சார்பில் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்யப்படும். ஆனால், கடந்த 2 வாரங்களாகவே தொடர் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் மொத்த நெல் சாகுபடி பரப்பளவான 2 லட்சம் ஏக்கரில் சுமார் 85,000 ஏக்கரில் அறுவடை செய்ய முடியாமல் கதிர்கள் சாய்ந்தும் அழுகியும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களிலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 25,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மக்காசோளம், உளுந்து, பயறு, எள் போன்ற பயிர்களும் மழையின் காரணமாக முழுமையாகவே அழுகிவிட்டன. எனவே, சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உடனே நிவாரண தொகை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:மழையினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பலவிதமான பயிர்கள் அழுகி பாதிக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை கூட்டாக சென்று கணக்கெடுத்து, விவசாயிகளின் ஆதார் எண், வங்கிக் கணக்கு போன்ற விவரங்களுடன் வரும் 29-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரப்பூர்வமாக கலெக்டர் அறிவிக்க வேண்டும்.மேலும், சாகுபடி கணக்கின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாகவே சாகுபடி பொய்த்து போனதால் அனைத்து விதமான கடன்களையும் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: