கொரோனா காரணமாக சுற்றுலாதலங்களுக்கு தடை புலிமேடு நீர் வீழ்ச்சியை காண குவிந்த பொதுமக்கள்

அணைக்கட்டு: கொரோனா காரணமாக சுற்றுலாதலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் புலிமேடு நீர் வீழ்ச்சியை காண பொதுமக்கள் குவிந்தனர். கடந்தாண்டு இறுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு மலையடிவாரத்தில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு ஏற்பட்ட நீர்வீழ்ச்சியை ஏராளமான மக்கள் சென்று பார்த்தனர். தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக அங்கு அருவிபோல ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியை காண பல்வேறு ஊர்களிலிருந்து மக்கள் வருகின்றனர்.

இந்நிலையில், காணும் பொங்கலையொட்டி நேற்று சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்படி வேலூர் கோட்டை பூங்கா, அமிர்தி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாதலங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த வேலூர், கணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் புலிமேடு மலையடிவாரத்திற்கு வந்தனர். நீண்ட நேரம் நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்தனர். ஏராளமான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

பஸ் போக்குவரத்து வசதியில்லாததால் அவதி

புலிமேடு பஸ் நிறுத்தத்திலிருந்து கிராமம் வரை செல்ல பஸ் வசதியில்லை. இதனால், 4 கி.மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, புலிமேடு கிராமத்திற்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் நீர்வீழ்ச்சியை காண மக்கள் அதிகளவில் திரள்வதால் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். தண்ணீர் அருவிபோல விழும் வகையில் நீர்வீழ்ச்சியாக மாற்றி சுற்றுலாதலமாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>