திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யாவும் விலகியது: குறைகளை களைய முடியவில்லை என குற்றச்சாட்டு

மாஸ்கோ: ஆயுத பரவலை தடுக்கவும், ஒரு நாடு அதிகளவில் ஆயுதங்கள் குவிப்பதை தடுக்கவும் சர்வதேச அளவில் பல்வேறு ஆயுத கட்டுப்பாட்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டமும் இதில் அடங்கும்.

அதே போல், ஒரு நாட்டின் வான்வெளியில் உளவு விமானங்களை பறக்க விட்டு, அந்நாட்டு ராணுவ நிலைகளையும், அதன் உண்மை நிலவரங்களை உளவு பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் மற்ற நாடுகளுக்கு அனுமதி அளிப்பதற்காக, ‘திறந்த வான்வெளி ஒப்பந்தம்’ ஏற்படுத்தப்பட்டது. சர்வதேச அளவில் ஆயுத கையிருப்பு பற்றிய நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, இந்த ஒப்பந்தம் வழி வகை செய்தது. ஆனால், கடந்தாண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

‘ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்த கூடிய நடுத்தர தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை ரஷ்யா குவித்து வருகிறது. அவற்றை கண்காணிக்க, அமெரிக்க உளவு விமானங்களுக்கு அந்நாடு அனுமதி அளிக்க மறுக்கிறது. இதை கண்டித்து, ஒப்பந்ததில் இருந்து அமெரிக்கா விலகுகிறது,’ என தெரிவித்தார். இ்ந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி ஜெர்மனி, பிரான்ஸ்  போன்ற நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யாவும் நேற்று முன்தினம் அறிவித்தது. ஒப்பந்தத்தில் உள்ள குறைகளையும், முட்டுக்கட்டைகளையும் அகற்ற முடியவில்லை என்றும், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, ரஷ்யா இதிலிருந்து விலகி இருக்கிறது.

Related Stories: