விழித்துக் கொள்ளுமா மின்சார வாரியம்!: தஞ்சையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 2 சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மறவக்காடு பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை ஓடை மறவக்காடு பகுதியில் 2 சிறுவர்கள் ஆட்டுக்கு இலை பறிப்பதற்காக அங்குள்ள ஓடையை கடந்து சென்றுள்ளனர். தஞ்சையில் பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள மின்கம்பி அறுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த கௌதம் (10 ) என்கின்ற சிறுவன் மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை கண்ட மற்றொரு சிறுவன் தினேஷ் (12 ) என்பவர் கௌதம்-ஐ காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இத்தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கும், மின்வாரியத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு சகோதரர்கள் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்மாற்றிகள் சரியாக பராமரிக்கப்படாததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின்சாரம் தாக்கி சகோதரர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் தஞ்சை அருகே வரகூரில், தனியார் பேருந்து மின்கம்பியில் உரசி 4 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. அருந்துகிடக்கும் மின்சார வயர்கள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் மின்கசிவு, பழுதடைந்த மின்கம்பிகள், ஊழியர்களின் அலட்சியம் என மின்சார விபத்து என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மின் விபத்துகளால் ஆண்டுதோறும் 300க்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: