தனியார் கடைகளில் தரமற்ற விதைகள் கருகிப்போன நெற்பயிர்களால் விவசாயிகள் கடும் பாதிப்பு-சரமாரி குற்றச்சாட்டு

*குரலற்றவர்களின் குரல்

காட்டுமன்னார்கோவில்: கடலூர்  மாவட்டம்  காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக  120 நாள் கொண்ட குறுகிய கால நெற்பயிர்களை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். விதை நெல் தட்டுப்பாட்டால் தனியார் உரக்கடையில் இருந்து கர்நாடகா பொன்னி ரக விதைகளை வாங்கி பயிரிட்டிருந்தனர்.  கதிர்கள் முற்றிவரும் சூழலில்  இலை, கதிர்கள் கருகி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜேஜிஎல் 120 நாள் நெல் ரகம் பரவலாக பயிரிடப்பட்டிருந்த நிலையில் கருகி வருவது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.

சரியாக விளையாமல் பதராகிப் போனதால், விதை நெல் வாங்கிய பணம் கூட கிடைக்கவில்லை என்கிறார்கள் விவசாயிகள் வேதனையுடன். இது குறித்து  எய்யலூர் ஊராட்சிக்கு உட்பட்ட  மேல்புளியம்பட்டு கிராமத்தை  சேர்ந்த விவசாயி குமார்கூறுகையில்,  கடந்த ஆண்டு ஜேஜிஎல் 120 நாள் நெல் ரகத்தை தனியார் உரக்கடையில் 35 கிலோ வாங்கி பயிரிட்டேன். ஆரம்பத்தில் நன்றாக வளர்ந்தது, ஆனால் விளைச்சல் படுமோசமாக இருந்தது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு  41 ரகம் மற்றும் கர்நாடகா பொன்னி நெல் விதையினை 35 ஏக்கரில் விதைத்தேன். அடி உரம், பூச்சிக்கொல்லி போன்றவைகளை உரிய நேரத்தில்  அடித்து பராமரித்து வந்தேன்.

கதிர்கள் முற்றும் தருவாயில் கதிர்கள், இலைகள்  கருகிபோய்விட்டது. ஆடு, மாடுகளை விற்றும் வட்டிக்கு கடன் வாங்கியும் செலவு  செய்து குறுவை மற்றும் சம்பாவை சேர்த்து சுமார் 21 லட்சம் ரூபாய் வரைசெலவு  செய்துள்ளேன். விதை நெல் தட்டுப்பட்டால் விவசாயிகள் தனியார் கடைகளில் தரமில்லாத நெல் விதைகளை வாங்குவதால் நஷ்டம் ஏற்படுகிறது. வேளாண் துறை தரமான விதைகளை வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும், என்றார். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, தனியார் உரக்கடையில், விதைகள் வழங்குவதோடு எங்கள் பணி முடிந்துவிடும். உரம், பூச்சிக்கொல்லி தேர்வு எல்லாம் விவசாயிகளின் பொறுப்பு. நாங்கள் என்ன செய்யமுடியும். நிறையபேர் வாங்கிச்செல்கிறார்கள். அனைவரும் இது போன்று குற்றம் சாட்டுவதில்லை என முடித்துக்கொண்டனர்.

இது குறித்து மற்றொரு விவசாயி கூறுகையில், எங்கள் பகுதியில் விதை நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தனியார்  உரக்கடையில் வாங்க வேண்டியுள்ளது. தரமற்ற விதைகளை கொடுப்பதால் மகசூல் பாதிக்கப்படுகிறது. உரம், பூச்சிக்கொல்லி என அனைத்தையும் அவர்கள் கடையிலேயே வாங்க வேண்டும். இல்லையெனில் ஆலோசனை கிடைப்பதில்லை. இதனால் வேறு ஒரு இடத்தில் பூச்சிக்கொல்லி வாங்கி அடிக்கும் போது, நெல் கருகிபோய்விடுகிறது.  இதேபோல் 4 ஏக்கர் பயிரிட்டிருந்த ஒருவருக்கும்,  10  ஏக்கரில் நெல் விதைத்திருந்த மற்றொருவரும் கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் உரக்கடைகளில் தரமற்ற விதைகளை குறைவான விலைக்கு விற்பதால் பலரும் பின் விளைவு தெரியாமல் வாங்கி நஷ்டமடைகின்றனர். மேலும் விவசாய இடுபொருள்  தங்களிடமே  வாங்க வேண்டும்  என நிர்ப்பந்திக்கின்றனர். தரமற்ற விதைகளை விற்பனை செய்வோர் மீது வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  காட்டுமன்னார்கோவில் பகுதியில்   சராசரியாக 20 சதவீத விவசாயிகள் இது போன்று தரமற்ற விதைகளால் பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

Related Stories: