கிழக்கு டெல்லியில் திறந்தவெளியில் இறந்துகிடக்கும் பறவைகள் பற்றி புகார் தெரிவிக்க உதவி எண்கள் : இறைச்சி கடைகளை எம்சிடி அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவு

புதுடெல்லி:  கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விகார் பேஸ்-3  பூங்கா வளாகத்தில் கடந்த சில நாட்களாக பல காகங்கள் இறந்து கிடந்தன. அதேபோன்று கிழக்கு டெல்லியின்  சஞ்சய் ஏரியில் இருபத்தேழு வாத்துகள் மற்றும் தேசிய தலைநகரம் முழுவதும்  கிட்டத்தட்ட 100 காகங்கள் கடந்த சில நாட்களில் இறந்து கிடந்தன. இந்த  பறவைகளில் சிலவற்றிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் போபால் ஆய்வகத்திலிருந்து நேற்று முன்தினம் வந்தன. அதில், உயிரிழந்த பறவைகள் பேர்டு-புளு நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்ததை உறுதி செய்தன. டெல்லியில் பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி மாநில அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாககங்கள் அலர்ட் ஆகி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. பறவை காய்ச்சல் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது பற்றி வடக்கு மாநகராட்சி மேயர் ஜெய் பிரகாஷ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் என்டிஎம்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலைமையை கண்காணிக்க மேயர் தலைமையிலான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி மேயர் ஜெய் பிரகாஷ் சார்பில் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பறவைக் காய்ச்சலின் நிலைமையைக் கருத்தில் கொண்டு,  சம்மந்தப்பட்ட அனைத்து துறையினரும் தாமாக முன்வந்து டெல்லிவாழ் மக்களுக்காக பணியாற்ற  வேண்டும். மேலும், நகரில் உள்ள நிலைமையை கண்காணிக்க மேயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு தினசரி கண்காணிப்பை மேற்கொள்ளும். பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு  பிரச்சாரங்கள் நடத்தப்படும். இறைச்சி கடைகளை அதிகாரிகள் தொடர்ந்து  கண்காணிப்பார்கள்.அனைத்து உணவகங்கள் மற்றும்  ஹோட்டல்களுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறந்தவெளி  பகுதிகளில் இறந்த பறவைகளை கண்டால் அதுகுறித்து புகார் தெரிவிக்க ஒரு ஹெல்ப்லைனை உருவாக்க அதிகாரிகள்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தங்களத எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் குழு கண்காணிப்பை மேற்கொள்ளும் என கிழக்கு மாநகராட்சி மேயர் நிர்மல் ஜெயின் தெரிவித்தார். இதுபற்றி ஜெயின் மேலும் கூறுகையில், இறைச்சி கடைகளின் உரிமையாளர்களுக்கு பறவைக்  காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், எனவே ஏதேனும் கோழி  இறந்தால், அதுபற்றி அவர்கள் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம. இதனால்  உயிரிழந்த பறவையின் சடலத்தை முறையாக அகற்ற முடியும். சவாலை எதிர்கொள்ள  கிழக்கு டெல்லி மாநகராட்சியின் ரேபிட் ரெஸ்பான்ஸ் குழுவை அமைக்க உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: