உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு சாத்தியமா? மருத்துவ குழுவிடம் ஆலோசனை

புதுடெல்லி: ‘உச்ச நீதிமன்றத்தில் பழைய முறையில் நேரடி விசாரணை நடத்த சாத்தியம் உள்ளதா? என மருத்துவ குழுவினருடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது,’ என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச்சில் நாடு முழுவதும்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், கீழமை மன்றங்கள் என அனைத்தும் முன்னெச்செரிக்கையாக மூடப்பட்டன. பின்னர், அரசு அறிவித்த தளர்வுகளால் சென்னை உட்பட பல்வேறு உயர் நீதிமன்றங்கள் நேரடி விசாரணையை தொடங்கியுள்ளன. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் தற்போது வரை வழக்குகள் காணொலி மூலமாகவே நடத்தப்படுகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம் வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை பரிசீலனை செய்து வரும் அவர், நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘உச்ச நீதிமன்றத்தை பழையபடி நேரடி முறையில் நடத்துவது தொடர்பாக, மருத்துவ குழுக்களுடன் ஆலோசனை செய்த பிறகுதான் முடிவு செய்யப்படும். இப்போது இருக்கும் இக்கட்டான சூழலில் நேரடி விசாரணைகள், அலுவல்களை நடத்தினால் அது கொரோனா வைரஸ் பரவலை ஏற்படுத்தி விடும். அதனால், மேலும் சில காலம் தொடர்ந்து இதே போன்று செயல்படலாம் அல்லது நேரடி விசாரணைக்கு சாத்தியம் உள்ளதா? என மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது,’ என கூறியுள்ளார்.

Related Stories: